Published : 19 Aug 2023 06:09 AM
Last Updated : 19 Aug 2023 06:09 AM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் மற்றும்ஓய்வூதியம், உதவித்தொகை பெறுவோரது குடும்பத்தில் உள்ள பெண்கள் விண்ணப்பிப்பதற்கான சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப் பத்தை வாங்கி பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர்மகளிர் உரிமைத் தொகை திட்டம்வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் இத்திட்டத்துக்காக 2 கட்டமாக கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் ஆக.4 வரையும், ஆக.5 முதல் 12-ம்தேதி வரையும் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. இதில், 1.54 கோடி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் அறிவிப்பு: இதற்கிடையே, வருவாய்த் துறையின்கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பத்தில் தகுதி வாய்ந்த பெண்கள் மற்றும், முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே நடைபெற்ற முகாம்களில் பதிவு செய்யாதவர்களுக்கு ஆக.18, 19, 20 ஆகிய 3 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதிகளில் முகாம் நடைபெற்ற இடங்கள் மற்றும் நியாயவிலைக் கடைகளில் மகளிர்உரிமைத்தொகை விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நேற்று தொடங்கின.
இன்றும் நாளையும்: அதிக அளவில் பெண்கள் வந்து விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உடனே பதிவு செய்தனர். இன்றும், நாளையும் (ஆக.19, 20) விண்ணப்பப் பதிவு நடை பெற உள்ளது. விண்ணப்ப பதிவின் போது, சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT