Published : 19 Aug 2023 06:07 AM
Last Updated : 19 Aug 2023 06:07 AM
சென்னை: சென்னை அயனாவரம் தாலுகாவுக்கு உட்பட்ட கொளத்தூர் ஜெயந்தி நகரில் தனது தாயாரால் எழுதி வைக்கப்பட்ட 3,710 சதுர அடிநிலத்துக்கு பட்டா வழங்க உத்தரவிடக் கோரி, ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிஎஸ்.எம்.சுப்பிரமணியம், மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை வருவாய்த் துறை ஆவணங்களுடன் சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, வருவாய்த் துறை அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில், ‘மனுதாரர் குறிப்பிட்டுள்ள சொத்து குறித்த ஆவணங்களில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இந்த நிலங்களுக்கும் மனுதாரருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மனுதாரர் குறிப்பிட்டிருந்த நிலத்தில் ஒரு பகுதி பொதுசாலையாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மற்றொரு பகுதி ரெஜியா பேகம் என்பவருக்கு சொந்தமானது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எந்த ஆவணங்களும் இல்லாமல் நிலத்தை அபகரிப்பதற்காக, நீதித்துறை நடைமுறைகளை தவறாக பயன்படுத்த முயற்சித்ததாக கூறி, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிதத்துடன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
மேலும், அபராதத் தொகையை ஆக.22-ம் தேதிக்குள் உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT