

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்கப்படும், என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை அதிமுக மாநாட்டுக்கான இறுதிக் கட்டப் பணிகளை நேற்று துணைப் பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா, காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர், 51 அடி உயர கொடிக் கம்பம், 3 இடங்களில் உள்ள சமையல் கூடங்கள், மாநாட்டுப் பந்தல் ஆகியவற்றை பார்வையிட்டு, அதன் பொறுப்பு நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
நிகழ்ச்சிகளை எவ்வளவு தொலைவிலிருந்தாலும் காணும் வகையில், விழா மேடை பகுதியில் பிரம்மாண்டமான டிஜிட்டல் திரை 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக, ஆங்காங்கே எல்.இ.டி. திரைகளும் வைக்கப்படுகின்றன.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: மாநாடு அன்று 3 வேளையும் அறுசுவை விருந்து தொண்டர்களுக்கு பரிமாறப்படும். காலையில் இட்லி, பொங்கல், வடை, உப்புமா, சட்னி, சாம்பார் வழங்கப்படும். மதியம் வெஜிடபிள் பிரியாணி, தக்காளி சாதம், தயிர் சாதம், புளிசாதம், காய்கறி கூட்டு, பொரியல், அப்பளம் வழங்கப்படும். 300 மி.லி. அளவு கொண்ட 10 லட்சம் குடிநீர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தவும், பிளாஸ்டிக் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்தல் அருகே 150 மொபைல் கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இது தவிர, ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு வருவோர் 4 திசைகளில் இருந்தும் பந்தலுக்கு வர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.