

நாகர்கோவில்: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடக்கூடும் என, முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று காலை நாகர்கோவில் பார்வதிபுரத்தில் நடைபயணத்தை தொடங்கி, மதியம் வேப்பமூடு சந்திப்பில் நிறைவு செய்தார். அங்கு அவர் பேசியதாவது: இந்திரா காந்தியை கொச்சையாக பேசியவர் கருணாநிதி. அதன் பின் மூன்று ஆண்டுகளில் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சிதருக என, இந்திராவை அழைத்தார்.
காங்கிரஸ் திமுகவுக்கு அடிமையாக உள்ளது. பிரதமர் மோடி எதுவும் செய்யவில்லை என, ராமேசுவரத்தில் ஸ்டாலின் கூறுகிறார்.1964-ம் ஆண்டு தனுஷ்கோடியில் புயல் வந்து பாலம் அழிந்தது.அதன்பிறகு அவர்கள் 6 முறைஆட்சிக்கு வந்தும் தனுஷ்கோடிக்கும், ராமேசுவரத்துக்கும் எதுவும் செய்யாமல் பிரதமரை குறை சொல்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அதே கடற்படை, அதே கடல், அதே இலங்கை. ஆனால், மோடி ஆளுமையால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்கவில்லை. 2021-ல் மீனவருக்கான அமைச்சரகம் உருவாக்கினார் மோடி. படகுகளுக்கு ரூ.2 லட்சம் முதல் 80 லட்சம்வரை மானியம் கொடுக்கிறார். மீனவர்களை மீன் விவசாயி என அழைத்தார்.
நாகர்கோவில் மேயர் மகேஷைபோல் உலகத்தில் எந்த நாடாவது ரிமோட்டில் தேசிய கொடி ஏற்றியதை பார்த்ததுண்டா?. கை வலித்தால் மேயர் பதவியை ராஜினாமாசெய்துவிட்டு போகவேண்டியதுதானே. தேசத்துக்கு எதிராக ஆட்சி செய்துகொண்டிருப்பவர்கள் திமுகவினர். ஊழலின் ஊற்றுக்கண் திமுக.டாஸ்மாக் வருவாயை திமுக 22 சதவீதம் அதிகரித்து காட்டியுள்ளது.
பிரதமர் மோடி தமிழகத்தில் கன்னியாகுமரியிலோ, ராமநாதபுரத்திலோ அல்லது வேறு ஏதாவது தொகுதியிலோ போட்டியிடக்கூடும் என, ஸ்டாலின் அச்சப்படுகிறார். நரேந்திர தத்தாவாக வந்த ஒருவரை சுவாமி விவேகானந்தராக மாற்றி அனுப்பியது குமரி மண். இங்கிருந்தே மாற்றம் தொடங்கட்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
மாலையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரையில் நடைப் பயணத்தை தொடங்கி கொட்டாரம் சந்திப்பில் நிறைவு செய்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, பாஜக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.