Published : 22 Dec 2017 09:46 AM
Last Updated : 22 Dec 2017 09:46 AM

‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு கவிஞர் இன்குலாப், யூமா வாசுகி தேர்வு: விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு

இந்த ஆண்டின் ‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. எனினும், அவ்விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.

இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து ‘சாகித்ய அகாடமி’ சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ‘சாகித்ய அகாடமி’யின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில், அந்த அகாடமியின் நிர்வாக சபைக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு விருது பெறுவோர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ் மொழிக்கான விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் ‘அன்னம்’ பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் இன்குலாப் பின் ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கீழக்கரையில் பிறந்த இன்குலாப்பின் இயற்பெயர் சாகுல் அமீது. வெள்ளை இருட்டு, சூரியனைச் சுமப்பவர்கள், ஒவ் வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன் உட்பட பல நூல்களை இவர் எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் இந்திரன், பா.ஜெயப்பிரகாசம், பொன்னீலன் ஆகியோரைக் கொண்ட தேர்வுக் குழு, தமிழ் மொழியில் விருதுக்குரிய நூலை தேர்வு செய்தது.

‘சாகித்ய அகாடமி’ விருது வழங்கும் விழா 2018, பிப். 12-ல் புதுடெல்லியில் நடைபெறவுள்ளது. விருதுபெறுபவருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் மற்றும் செப்புப் பட்டயமும் வழங்கப்படும்.

யூமா வாசுகிக்கு விருது:

24 மொழிகளில் வெளியாகும் சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் புதுடெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன.

இவ்விருது ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் செப்புப் பட்டயம் கொண்டதாகும். தமிழில் மொழி பெயர்ப்புக்கான விருது எழுத்தாளர் யூமா வாசுகிக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஓ.வி.விஜயனின் ‘கசாக்கிண்ட இதிகாசம்’ என்ற மலையாள மொழி நாவலை, ‘கசாக்கின் இதிகாசம்’ என்ற பெயரில் யூமா வாசுகி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ‘காலச்சுவடு’ பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.

பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு, இரவுகளின் நிழற்படம் உள்ளிட்ட 3 கவிதை நூல்கள், உயிர்த்திருத்தல் எனும் சிறுகதை நூல், ரத்த உறவு, மஞ்சள் வெயில் என 2 நாவல்களையும் எழுதியுள்ளார்.

விருதை ஏற்க மறுப்பு

கவிஞர் இன்குலாப்புக்கு வழங்கப்படவுள்ள ‘சாகித்ய அகாடமி’ விருதை ஏற்கப் போவதில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவரது மகள் மருத்துவர் ஆமினா ‘தி இந்து’-விடம் கூறியதாவது: எங்கள் அப்பா இத்தகைய விருதுகள் வரும் என எதிர்பார்த்ததில்லை. விருதுகள் கிடைக்கவில்லை என வருத்தப்பட்டதும் இல்லை.

தனது எழுத்துகளுக்கான விசாரணைகள், எதிர்ப்புக் குரல்கள், கண்டனங்கள் போன்றவற்றைதான் அவர் உண்மையான விருதாக கருதினார். ஒருவேளை இதுபோன்ற விருதுகள் கிடைத்தால் ஏற்க மாட்டேன் என அவர் வாழும்போதே எங்களிடம் கூறியிருக்கிறார். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ‘சாகித்ய அகாடமி’ விருதை ஏற்பதில்லை என அவரது எண்ணப்படியே குடும்பத்தினர் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x