Published : 03 Dec 2017 08:23 AM
Last Updated : 03 Dec 2017 08:23 AM

முன்பணம் பெற்றபின் வேறொரு நபருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு: கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் - நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு

முன்பணம் பெற்றுக்கொண்டு வேறொரு நபருக்கு குடியிருப்பை ஒதுக்கிய கட்டுமான நிறுவனம், வாடிக்கையாளருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவேற்காடு கோ - ஆப்ரேட்டிவ் நகரைச் சேர்ந்த ஆர்.வி.மாதவன், சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை அமைந்தரையைச் சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்தினர் ஊரப்பாக்கம், காரணை புதுச்சேரி, மகாலட்சுமி நகரில் அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டனர். அதனை விளம்பரப்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களையும் விநியோகித்தனர். அந்த விளம்பரத்தைப் பார்த்து அதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்க முடிவு செய்தேன்.

பின்னர், ரூ.26 லட்சம் மதிப்புள்ள 1,150 சதுர அடி கொண்ட ஒரு குடியிருப்பை முன்பதிவு செய்தேன். அதற்கு முன்பண மாக ரூ.11.50 லட்சம் செலுத்தினேன். அதைத்தொடர்ந்து, கட்டுமான வரைபடத்தின் நகல், பவர் ஆஃப் அட்டர்னி நகல் உள்ளிட்டவற்றை அவர்கள் அளித்தனர். ஆனால், நான் முன்பதிவு செய்த குடியிருப்பை எனக்கு ஒதுக்காமல், மோசடி செய்து வேறொரு நபருக்கு ஒதுக்கிவிட்டனர்.

அதோடு, நான் செலுத்திய தொகையையும் கட்டுமான நிறுவனத்தினர் திருப்பி அளிக்கவில்லை. எனவே, நான் செலுத் திய தொகையை திருப்பி அளிக்கவும், இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்கவும் கட்டுமான நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (வடக்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் எம்.உயிரொளி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

குடியிருப்பின் மதிப்பில் கிட்டத்தட்ட 50 சதவீத தொகையை பெற்றுக்கொண்ட பிறகும், மனுதாரருக்கு தெரியாமல் வேறொரு நபருக்கு கட்டுமான நிறுவனத்தினர் குடியிருப்பை ஒப்படைத்துள்ளனர். மேலும், மனுதாரர் செலுத்திய தொகையையும் திருப்பி அளிக்காதது சேவை குறைபாடாகும். இதை மறுப்பதற்கு எந்த ஆதாரத்தையும் கட்டுமான நிறுவனத்தினர் சமர்ப்பிக்கவில்லை. விசாரணைக்கும் ஆஜராகவில்லை.

எனவே, மனுதாரர் செலுத்திய முன்பதிவு தொகையான ரூ.11.50 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் கட்டுமான நிறுவனத்தினர் திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரத்தையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x