Published : 18 Aug 2023 06:27 PM
Last Updated : 18 Aug 2023 06:27 PM

“புதிய அவதாரத்தில் குலக்கல்வி” - ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க கி.வீரமணி வலியுறுத்தல்

கி.வீரமணி | கோப்புப்படம்

சென்னை: "குலக்கல்வித் திட்டத்தைத் திணிக்கத் திட்டமிட்டுள்ள ஒன்றிய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா’ திட்டத்தை அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி திராவிட மாடல் அரசின் முதல்வர் கடுமையாக எதிர்க்க வேண்டும்" என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதன தர்மத்தை, சாதியை காப்பாற்றி நிலைக்க வைக்கும் தத்துவத்தைப் பாதுகாப்பதே கடந்த 9 ஆண்டுகளாக நடந்துவரும் பாஜக ஆட்சியின் செயல்பாடாகும். உயர்ந்தவன் - தாழ்ந்தவன்; தொடக்கூடியவன் - தொடக்கூடாதவன் என்று மனிதர்களை வேற்றுமைப்படுத்தி, அடிமைப்படுத்திய குலதர்மப் பாம்பு, பிரதமர் மோடி ஆட்சியில் திடீரெனப் படமெடுத்தாடி அதன் நச்சுப் பல்லை நீட்டிக் காட்டுகிறது. ‘‘விஸ்வகர்மா திட்டம்‘’ என்பதின்படி ஒரு புதிய குலதர்மத் தொழிலைப் புதுப்பித்து, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது சுமத்தப்பட்ட அந்தப் பிறவி இழிவை மறைமுகமாகப் புதுப்பித்து, அந்த ‘‘கீழ்சாதியர் அவரவர் குலத்தொழிலை கிராமங்களிலும், நகரங்களிலும் 30 லட்சம் பேர் செய்வார்கள் - அதற்கு நிதி, மானியம் உதவி உண்டு என்று ஆகஸ்ட் 15 ஆம் நாளில் டெல்லி செங்கோட்டை உரையில் பேசியுள்ளார் பிரதமர் மோடி.

16.8.2023 அன்று ‘‘பி.எம். விஸ்வகர்மா’’ (PM Viswakarma’) திட்டம் என்பதை அமைச்சரவையின் பொருளாதார குழு ஏற்று 13,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பள்ளிக்கூடங்களுக்குப் பதிலாக குரு - சிஷ்ய பரம்பரைக் கல்விப் பயிற்சியாம். 2023-2024 முதல் 2027-2028 வரை இத்திட்டப்படி குலத் தொழிலை செய்ய அவரது வாரிசுகளுக்கு, குடும்பத்தினருக்கு கற்றுக் கொடுப்பார்களாம். அதற்கு இந்த 13,000 கோடி ரூபாயாம்.18 பாரம்பரிய குலத் தொழிலை அடையாளம் கண்டுள்ளார்களாம்.

தச்சுத் தொழில், படகு செய்தல், கருமான் பட்டறைத் தொழில், குயவன் மண்பாண்டத் தொழில், சுத்தி முதல் துடைப்பம் - விளக்குமாறு கட்டும் தொழில் (Broom Maker), பொம்மை செய்தல், சிகை திருத்தும் தொழில்(Barber), கைத்தறித் தொழில், பூக்கட்டும் தொழில், சலவைத் தொழில், தையல் தொழில், மீன் பிடித் தொழில் முதலியன இத்திட்டத்தில் வருகிறதாம். இதனைச் செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை மானிய அடிப்படையில் கடன் அளிப்பார்களாம்.தூண்டில் எவ்வளவு லாவகமாக அமைக்கப்பட்டிருக்கிறது பார்த்தீர்களா?

நம் நெஞ்சங்கள் சமூக நீதிக்காகப் போராடிப் போராடி, சலவைத் தொழிலாளியின் மகன் மீண்டும் அதே தொழிலில் போய் அவமானமும், தற்குறித்தனத்தையும் பெறாமல், திராவிடம் முயன்று அவரைப் படிக்க வைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக்கி வெற்றி கண்டது. திராவிடத்தின் அடிப்படையே ஆடு மேய்ப்பவர்களையும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக்கி, அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப்படவேண்டும் என்பதே. அதுதானே உண்மையான சமூக மாற்றமாக இருக்க முடியும்? இளைஞர்களே, நீங்கள் உங்கள் குலத்தொழிலைச் செய்தாக வேண்டும் என்றால், நிரந்தர இழிவும், அடிமைத்தனமும்தான் உங்களுக்குக் கிட்டும், இந்த பாஜக ஆட்சியில்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’’ என்ற குறள் பிறந்த மண்ணில் இப்படி மீண்டும் குலக்கல்வியா? அதுவும் அனைத்து இந்தியாவிலும் என்றால், இதைவிட கடைந்தெடுத்தப் பிற்போக்குத்தனம் உண்டா? முன்னேற்ற கடிகாரத்தை தலைகீழாகத் திருப்பி வைப்பதா? இதுபற்றிக் கண்டனக் குரலினை அத்துணை முற்போக்கு சாதி ஒழிந்த சமத்துவ சமுதாயம் காண விரும்பும் அனைவரும் ஒன்றுபட்டு உடனடியாக ஓர் அணியில் திரண்டு எழுந்து எதிர்ப்புக் கடலாய்ப் பொங்கி எதிர்த்து இத்திட்டத்தை கருவிலேயே அழித்து, குலத்தொழில் பாதகத்தை ஒழித்துக் கட்டவேண்டும்.

தொழிலை ஏன் பாரம்பரியமாகச் செய்ய வற்புறுத்தவேண்டும் - செருப்புத் தைப்பவர், துணி வெளுப்பவர், சிகை திருத்துபவர் பிள்ளைகள் வேறு படிப்பைப் படித்து முன்னேற முடியாமலே இப்படி முட்டுக்கட்டை போடுவதை எப்படி ஏற்க முடியும்? தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை 1952-1953 இல் ஓட ஓட விரட்டி, ஒழித்து சமத்துவ நாயகர் பச்சைத் தமிழர் காமராசர் துணையோடு, புது வாய்ப்புகளை உருவாக்கி வரலாறு படைத்த மண் பெரியார் மண்ணான திராவிட மாடல் ஆட்சி நடக்கும் இந்த மண். இதுபற்றி அனைத்துக் கட்சிகளையும் திரட்டி, தலைவர்களை அழைத்து, முக்கிய முடிவுகளை எடுத்து, இந்தக் குலதர்ம புதுக்கரடியை விரட்டிட அனைத்து முயற்சிகளையும் செய்திட ஆயத்தமாவோம்.

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு முன் புதைகுழிக்கு அனுப்பப்பட்ட குலக் கல்வித் திட்டம், ஆரியம், ஆர்எஸ்எஸ் ஆட்சியின் மூலம் மீண்டும் புதிய அவதாரம் எடுத்து, அகில இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்டோரை வதைக்க - டாக்டராக, பொறியாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக ஆகாமல் தடுப்பதற்கான ஒரு திட்டமே இந்தப் புதிய குலதர்மத் தொழில் புதுப்பிக்கும் இந்தத் திட்டமாகும். பெற்றோர்களே, புரிந்துகொண்டு விழித்துக் கொள்வீர். விடியல் ஏற்படுத்த ஆயத்தமாவீர். தமிழகத்தின் ‘திராவிட மாடல்’ ஆட்சியும், அதன் ஆற்றல்மிகு முதல்வரும் தமிழகம் இத்திட்டத்துக்கு ஒருபோதும் இசைவு தராது; கடுமையாக எதிர்க்கும் என்பதைப் பிரகடனப்படுத்துவதும் அவசர, அவசியம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x