“கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து” - தினகரன்

“கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்து” - தினகரன்
Updated on
1 min read

சென்னை: “இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில, "கச்சத்தீவை இலங்கை அரசிடம் தாரை வார்க்க காரணமாக இருந்தது திமுகதான் என்று உலகுக்கே தெரிந்த நிலையில் அதனை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுப்பது நகைப்புக்குரியது. கச்சத்தீவு பகுதியை கடந்த 1974-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

எம்.ஜி.ஆர் அப்போதைய தமிழக அரசு மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள் கூறி நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் இந்திரா காந்தியிடம் மனுகொடுத்திருந்தார். தமிழக மீனவர்கள் நலன்களை குழிதோண்டி புதைக்கும் வகையில் மத்திய அரசு, இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்த போது ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்க, அப்போதைய கருணாநிதி அரசு வலுவான எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

உண்மை இவ்வாறு இருக்க கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வகையில் திமுக சார்பில் அப்போது நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததை எல்லாம் எதிர்ப்பு என்ற பெயரில் இப்போது சுட்டிக்காட்டுவது கச்சத்தீவு விவகாரத்தில் மீண்டும், மீண்டும் திமுக மக்களை ஏமாற்றவே நினைக்கிறது என்பது உறுதிபடத் தெளிவாகிறது.

கச்சத்தீவை ஒப்படைத்தபோது எந்தவித வலுவான எதிர்ப்பும் தெரிவிக்காமல் சும்மா இருந்துவிட்டு, இப்போது மீனவர்கள் நலனில் அக்கறையாக இருப்பது போல காட்டிக் கொண்டு கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது முதலை கண்ணீர் வடிப்பது போல இருக்கிறது. கச்சத்தீவை ஒப்படைத்து தமிழக மீனவர்கள் நலனை காலம், காலமாக படு குழியில் தள்ளிக் கொண்டிருக்கும் திமுகவை மீனவர்கள் என்றைக்குமே மன்னிக்கமாட்டார்கள்.

பழனிசாமி அரசின் தவறால் ஆக்சிடென்டல் சிஎம் ஆன முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு மக்களும் விரைவில் முடிவு கட்டுவார்கள். இனியும் கச்சத்தீவை மீட்கப்போவதாக போலி கண்ணீர் வடிப்பதை விட்டுவிட்டு, மீனவர்கள் நலனை பாதுகாக்கவும், மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்கவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றேன்" என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in