கடும் போக்குவரத்து நெரிசலால் புதுச்சேரி மக்கள் தவிப்பு: தீர்வு எப்போது?

படங்கள்: எம்.சாம்ராஜ்
படங்கள்: எம்.சாம்ராஜ்
Updated on
2 min read

புதுச்சேரி: கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது புதுச்சேரி நகரம். குறிப்பாக சென்னை, விழுப்புரம், கடலூர், மற்றும் கிராமப் பகுதிகளில் இருந்து நகரத்துக்குள் வருவோர் அதிகளவில் பயன்படுத்தும் இந்திரா காந்தி சிலை சதுக்கம், ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதிகளில் முன் எப்போதையும் விட அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி - விழுப்புரம் இடையே செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், கடலூர் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அதிகளவில் இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியை கடந்துதான் நகரத்துக்குள் வர வேண்டும். வில்லியனூரில் இருந்து ஏராளமானோர் புதுச்சேரி நகருக்குள் பணிக்காகவும், படிக்கவும் வருகின்றனர். அவர்களும் இப்பகுதியை கடந்தே வர வேண்டும். வில்லியனூரில் இருந்து மூலக்குளம் வழியாக ரெட்டியார்பாளையம் கடந்து இந்திரா காந்தி சதுக்கத்தை அடையவே அதிகளவு நேரம் எடுக்கிறது.

நகரின் முக்கிய இடமான ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஐந்து முக்கியச் சாலைகள் சந்திக்கின்றன. நாள்தோறும் லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் இப்பகுதியை கடக்கின்றன. காலை, மாலை நேரங்களில் இப்பகுதியை கடக்க நெடுநேரம் எடுக்கிறது. இங்குள்ள சிக்னலில் போக்குவரத்து போலீஸார் அதிகளவில் பணியில் இருந்தாலும் இந்த நெருக்கடியை சமாளிக்க திணறுகின்றனர்.

சென்னை புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள் ராஜீவ் காந்தி சதுக்கத்தில் இணைகின்றன. இதனால் பேருந்துகள், கார்கள், வாகனங்கள் அதிகளவில் இந்தப் பகுதியை கடக்கின்றன. இந்த சதுக்கத்தை ஒட்டியே ஜிப்மர் மருத்துவமனை, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம், குழந்தைகள் நல மருத்துவமனை என பல முக்கிய இடங்கள் உள்ளன.முக்கிய ஊரகப் பகுதிகளான திருக்கனூர், ஊசுடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நகரத்தைத் நோக்கி நாள்தோறும் வேலைக்கு வரும் வாகனங்களும் இந்த வழியை கடந்தே வருகின்றன. சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் வார விடுமுறை நாட்களில் இப்பகுதிகளைக் கடக்க உள்ளூர் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

ராஜீவ், இந்திரா சிலை சதுக்கங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை தேவை என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று வர, ‘புதுச்சேரியில் போதிய மேம்பாலங்கள் இல்லாததே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கியக் காரணம்’ என்று பொதுப்பணித்துறை தெரிவித்தது. இந்தச் சூழலில் கடந்த 2020-ம் ஆண்டில், அரும்பார்த்தபுரம் ரயில்வே மேம்பாலத்தை காணொலி மூலம் திறந்து வைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “புதுச்சேரியில் ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை சதுக்கங்கள் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கி ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை உள்ள சதுக்கங்களின் வழியே மேம்பாலங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மொத்தம் ரூ. 440 கோடியில் மேம்பாலம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தில், “இந்த ஆண்டுக்குள் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும்” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் அறிவித்திருந்தார். மத்திய அமைச்சர் அறிவித்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில், புதுச்சேரி பொதுப்பணித் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்து 5 மாதங்களை கடந்துள்ள நிலையில் இதற்கான பணிகள் என்ன ஆனது என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த மேம்பாலத் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கி இரு சதுக்கங்களின் கீழ் மேம்பாலங்களை அமைக்க புதுச்சேரி அரசு கொள்கை முடிவு எடுத்து, மத்திய அரசு அனுமதி அளித்தது.

மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேம்பாலத்துக்கான வரைபடம் தயாரிக்கப்பட்டது. மத்திய நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றவுடன், டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கும். அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. நடப்பாண்டுக்குள் நிச்சயம் பணிகள் தொடங்கப்பட்டு விடும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in