Published : 18 Aug 2023 06:51 AM
Last Updated : 18 Aug 2023 06:51 AM

நாட்டின் கட்டமைப்பையே பாஜக சீரழித்துவிட்டது - ராமநாதபுரம் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

ராமநாதபுரத்தில் நடந்த திமுக தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாநிதி சிலையுடன் கூடிய பேனா நினைவுச் சின்னத்தை பரிசாக வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம். படம்: எல்.பாலச்சந்தர்

ராமநாதபுரம்: நாட்டின் கட்டமைப்பையே பாஜக சீரழித்துவிட்டதாக திமுக தென் மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ராமநாதபுரம் அருகே பேராவூரில் தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்ற பயிற்சிப் பாசறைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் 19 மாவட்டங்ளைச் 16,978 முகவர்கள் பங்கேற்றனர்.

அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், பெரியகருப்பன், பி.மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ், கனிமொழி எம்.பி. மற்றும் மாவட்டச் செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேர்தல் பணி, வாக்காளர் பட்டியலைக் கையாள்வது, அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது, திராவிட மாடல் ஆட்சி ஆகியவை தொடர்பான பயிற்சியை வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ, ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மதுரை பாலா, கனிமொழி எம்.பி. ஆகியோர் அளித்தனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக கொள்கைகள் நாடு முழுவதும் பரவ வேண்டும். நமது சீர்திருத்தச் சட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்த கருணாநிதி விரும்பினார். அது நிறைவேறும் காலம் நெருங்கி வருகிறது.

தமிழகம் முழுவதும் 68,036 பேர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வெற்றிக்கும் நீங்களே பொறுப்பு. 40 தொகுதிகளும் நமதே என நான் பேசுவதும் உங்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான். வாக்காளர்களின் குடும்ப உறுப்பினராக நீங்கள் மாற வேண்டும். 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்.

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ராமேசுவரம் சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் என்றார். அப்படி மாற்றினாரா? தனுஷ்கோடி வரையில் ரயில்பாதை அமைக்க மோடி அடிக்கல் நாட்டினார். இன்னும் திட்டம் வரவில்லை. மீனவர் வாழ்வு சிறக்க சபதம் எடுப்பதாக குமரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பேசினார். அதை நிறைவேற்றிவிட்டாரா? மீனவர்கள் பலர் கைதாகியுள்ளதும், தாக்கப்பட்டதற்குமான பெரிய பட்டியலே உள்ளது.

நாட்டின் கட்டமைப்பையே பாஜக சீரழித்துவிட்டது. மோடியின் ஆட்சி பலவீனமானதுதான். 2015-ல் மதுரைக்காக அறிவிக்கப்பட் எய்ம்ஸ் ஒப்பந்தப்புள்ளி வரை உருண்டு வர 9 ஆண்டுளாகியுள்ளன. இதுவும் வரும் மக்களவை தேர்தலுக்கான நாடகமா என தெரியவில்லை.இதையெல்லாம் தட்டிக் கேட்பதால்தான் நம்மை எதிர்க்கிறார்கள்.

2024-ல் பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாட்டைக் காப்பாற்ற முடியாது. அமைச்சர் எ.வ.வேலு பேசியதில் தவறேதும் இல்லை. அதை சமூக வலைதளங்களில் வெட்டி, ஒட்டி வெளியிடுகின்றனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் திமுகவை விமர்சிக்கிறார்கள் என்றால் இயக்கம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. நாட்டைக் காப்பாற்ற `இந்தியா' கூட்டணியை ஆதரியுங்கள் என்பதே நமது தேர்தல் முழக்கமாக இருக்கப் போகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

மீனவர்கள் மாநாட்டில் முதல்வர்: ராமேசுவரம் அருகே மண்டபத்தில் இன்று நடைபெறும் நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் தூத்துக்குடி, திருநெல்வேலி குமரி மாவட்ட மீனவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். 13,214 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x