

சென்னை: நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், அறநிலையத் துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய இந்து கோயில் கூட்டமைப்பு பொதுச் செயலாளரான வண்டலூரைச் சேர்ந்த கே.ஸ்ரீராம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல் கூறியிருப்பதாவது:
415 கிரவுண்ட் நிலங்கள்: எங்களது கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் உள்ள கோயில் சொத்துகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயில் 1929 முதல் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கோயிலுக்கு 415 கிரவுண்ட் நிலங்கள் நன்கொடையாளர்களால் தானமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயில் நிர்வாகத்தில் இருந்த பரம்பரை அறங்காவலர்கள் சிலர்முறைகேடாக கோயிலுக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சுமார்300 கிரவுண்ட் நிலங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். இக்கோயில், நுங்கம்பாக்கத்தில் உள்ளஇந்துசமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து 2 கிமீ தொலைவில்தான் உள்ளது.
எனவே இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைக் கண்டறிய வட்டாட்சியர் மற்றும் நிலஅளவைத்துறை உதவி இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.
அத்துடன் இந்த கோயில் நிலங்களை மோசடியாக விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி அமைக்க வேண்டும். ஏற்கெனவே விற்கப்பட்ட சொத்துகளை மீட்கவும், தற்போதுள்ள சொத்துகளைப் பாதுகாக்கவும் அறநிலையத் துறைக்கும், பத்திரப்பதிவுத் துறைக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
விசாரணை தள்ளிவைப்பு: இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் அளி்க்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை 2வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.