Published : 17 Dec 2017 10:28 AM
Last Updated : 17 Dec 2017 10:28 AM

மாற்றுத்திறனாளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர் பணி: நிறுத்திவைக்கப்பட்ட 140 இடங்களை 3 மாதத்தில் நிரப்ப நீதிமன்றம் உத்தரவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 140 இடங்களுக்கு மீண்டும் அறிவிப்பாணை வெளியிட்டு 3 மாதத்தில் நிரப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்க மாநிலச் செயலாளரான எஸ்.நம்புராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் என மொத்தம் 3,456 பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மே 9-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

ஆனால் அந்த அறிவிப்பாணையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 40 முதல் 70 சதவீதம் உடல் ஊனம் உள்ளவர்கள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டைப் பெற தகுதியானவர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் அரசாணைப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘மொத்தம் உள்ள 3,456 ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீதமான 140 ஆசிரியப் பணியிடங்களை மட்டும் நிரப்பாமல் வைத்திருக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘மாற்றுத்திறனாளிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த 140 இடங்களுக்கும் மீண்டும் முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு 3 மாதங்களுக்குள் அப்பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும்’ என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x