Published : 18 Aug 2023 06:32 AM
Last Updated : 18 Aug 2023 06:32 AM

ஐடிஐ-க்களில் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய பிரிவுகளில் பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை கிண்டியில் உள்ள அரசு ஐடிஐயில், நடைபெற்ற ‘நமது தொழிற் பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அங்கு காட்சிப்படுத்தப் பட்டிருந்த உலோக கைவினைப் பொருட்களை பார்வையிட்டார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சென்னை: மாறி வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப அரசு ஐடிஐ-க்களில் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட புதிய பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

பெண்களிடையே தொழிற் கல்விமற்றும் தொழிற் பயிற்சி நிலையங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கிண்டி அரசு ஐடிஐயில் ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:

தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு ஐடிஐக்கள் மற்றும் 310 தனியார் ஐடிஐக்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் 54 பொறியியல் தொழிற் பிரிவுகளிலும், 25 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

மாறி வரும் தொழில் நுட்பங்களுக்கு ஏற்பவும், எதிர்கால வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கிலும் தமிழக அரசு 71 அரசு ஐடிஐக்களை ரூ.2877.43 கோடி செலவில் `தொழில் 4.0' தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தியுள்ளது.

இந்த மையங்களில் புனேவைச் சேர்ந்த டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் இணைந்து, புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் மற்றும் மென்பொருட்கள் நிறுவப்பட்டு, ரோபோட்டிக்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், மேனுஃபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல், அட்வான்ஸ்டுமேனுஃபேக்சரிங், மெக்கானிக் மின்சார வாகனங்கள், இன்டர்நெட்ஆப் திங்க்ஸ், அடிட்டிவ் மேனுஃபேக்சரிங், இண்டஸ்ட்ரியல் பெயின்டிங், அட்வான்ஸ்டு பிளம்பிங், அட்வான்ஸ்டு ஆட்டோ மொபைல் டெக்னாலஜி போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமையில் 20 சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், 87.5-க்கு 12.5 என்ற விகிதத்தில் டாடா நிறுவனமும், தமிழக அரசும் முதலீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. இது தமிழகஐடிஐக்களின் வளர்ச்சியில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

கிண்டி அரசு ஐடிஐயில் தொழில்4.0 திட்டத்தின் மூலம் 5 நீண்டகால தொழிற்பிரிவுகள் மற்றும் 23 குறுகியகால தொழிற்பிரிவுகளில் இந்த ஆண்டு பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ. வீரராகவ ராவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x