

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 61-வதுபிறந்த நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: இம்மண்ணில் ஆழமாகவிதைக்கப்பட்டுள்ள பெரியார், அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும், செயல்களாலும் வளப்படுத்தும் விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, கனிமொழி எம்.பி., மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜோதிமணி எம்.பி., வி.கே.சசிகலா, நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும், விசிக எம்எல்ஏ-க்கள் ம.சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோரும் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திருமாவளவன் கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடினார். நேற்று காலை அம்பேத்கர் மணிமண்டபம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கும், பெரியார் நினைவிடத்திலும் அவர் மரியாதை செலுத்தினார். எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் மு.பாபு, விசிக அமைப்புச் செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பல்வேறு நலத் திட்ட உதவிகளை திருமாவளவன் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒவ்வோர் ஆண்டும் ஆக. 17-ம் தேதி தமிழர் எழுச்சி நாளாக விசிக சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில்பெரும்பான்மை இந்து மக்களாலேயே பாஜக ஆட்சி தூக்கி எறியப்பட்டு, நாடும், மக்களும், அரசமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்படும். என் மணி விழா நிறைவு மாநாடுஅக்டோபர் முதல் வாரத்தில் திருச்சியில் "வெல்லும் ஜனநாயகம்" என்ற பெயரில் நடைபெறும். அதில், முதல்வர் ஸ்டாலின் மற்றும்தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், தேசியத் தலைவர்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்போம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று முன்தினம்இரவு சென்னை தேனாம்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவனின் மணி விழா நிறைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், `திருமாமணி' என்ற மணிவிழா மலரை, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வெளியிட, திக தலைவர் கி.வீரமணி பெற்றுக் கொண்டார். நடிகர் சத்யராஜ், பாடலாசிரியர் கபிலன், திமுக வர்த்தக அணிச் செயலாளர் காசி முத்துமாணிக்கம், விசிக பொதுச் செயலாளர்கள் துரை ரவிக்குமார், ம.சிந்தனைச் செல்வன், துணைப் பொதுச் செயலாளர்கள் வன்னியரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.பன்னீர்தாஸ், ஊடகப் பிரிவு முதன்மைச் செயலாளர் பனையூர் மு.பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.