இன்றும் நாளையும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: முகூர்த்த தினத்தையொட்டி, இன்றும் நாளையும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் மாத தொடர் வளர்பிறை (ஆக. 20,21) முகூர்த்த நாட்களை முன்னிட்டு, ஆக. 18, 19-ம் தேதிகளில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்தும் கூடுதல் எண்ணிக்கையிலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து இன்று 500 பேருந்துகள், நாளை (ஆக.19) 350 பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களிலிருந்து 400 பேருந்துகள் என மொத்தம் 1,250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை (ஆக. 20) பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்குத் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து இன்று பயணம் மேற்கொள்ள 14,576 பேர், நாளை (ஆக. 19) பயணம் மேற்கொள்ள 9,844 பேர், ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) பயணம் மேற்கொள்ள 14,227 பேர் முன்பதிவு செய்துள்ளனர். சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்டணச் சலுகை: ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு வழங்கப்படும் 50 சதவீத கட்டண சலுகைத் திட்டத்தில், ஆக.8 முதல் 15-ம் தேதி வரை 1,682 பேர் பயன் பெற்றுள்ளனர். முன்பதிவு செய்வதன் மூலம் சிரமுமின்றி பயணிப்பதுடன், தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏதுவாக இருக்கும்.
மேலும், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கிடையே இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
