

சென்னை: தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பணிநிலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உ.உமாதேவி, தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
வெளி மாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல், சட்டப்படியான உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல் தொடர்பாக, சென்னை மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியக் கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது.
தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உ.உமாதேவி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இணை ஆணையர் தே.விமலநாதன், தொழிலாளர் ஆணையர் அலுவலக நிர்வாக அலுவலர் ந.வாசுகி முன்னிலை வகித்தனர்.
இதில், கூடுதல் தொழிலாளர் ஆணையர் உ.உமாதேவி பேசும்போது, வெளிமாநிலத் தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள், அரசின் திட்டங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தொடர்பான சட்ட உரிமைகள், தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு உள்ளிட்டவற்றை விளக்கினார்.
குறைந்தபட்ச ஊதியம்: மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை,குடும்பத்துடன் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு, கழிப்பறை வசதி, பெண் பணியாளர்களின் பாதுகாப்பு, குழந்தைத் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தாமல் இருப்பது குறித்து கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்தக் கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது)மற்றும் காவல் கண்காணிப்பாளர்களின் பிரதிநிதிகள், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக அலுவலர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், வெளிமாநிலப் பணியாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று, தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.