

திருச்சி: தெற்கு ரயில்வே ஊழியர்களின் நலனுக்காக ரயில்வே கூட்டுறவு நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இதை நிர்வாகிக்கும் 2 பெண்கள் உட்பட 19 பேர் கொண்ட இயக்குநர்கள் குழுவை தேர்ந்தெடுக்க 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், திருச்சி, திருச்சி-2, சென்னை, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் என 6 கோட்டங்களுக்கான கூட்டுறவு நாணய சங்க தேர்தல் பலகட்டமாக நடத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி, இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.2-ம் தேதி வரை நடைபெற்றது.
இதில், எஸ்ஆர்எம்யூ, டிஆர்யுஇ, எஸ்ஆர்இஎஸ், ஏ.ஐ.ஓ.பி.சி, எஸ்சிஎஸ்டி சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தனர். பின்னர் கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 4,820 உறுப்பினர்களைக் கொண்ட திருச்சி மற்றும் திருச்சி 2 கோட்டத்தில் 6 இயக்குநர்களுக்கான தேர்தலில் 31 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருச்சி, திருச்சி 2 கோட்டத்துக்கான தேர்தல் பொன்மலை பணி மனை, திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகம் என 59 இடங்களில் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கியது. பொன்மலை பணிமனை வாக்குச் சாடிக்குள் ஓய்வு பெற்றவர்கள் வந்ததால், சிறிய சலசலப்பு ஏற்பட்டது. வாக்காளர்களுக்கு ரூ. 500 பணம் கொடுப்பதாக எழுந்த புகாரால் சங்கங்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, உள்ளூர் போலீஸாருடன் இணைந்து ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் வாக்களித்துவிட்டு வெளியே வந்தவர்களுக்கு ரூ.500 ரொக்கம், பிரியாணி, மதுபானம் ஆகியவை தேர்தலில் போட்டியிட்ட சங்கங்ள் சார்பில் வழங்கப்பட்டன.
பொதுதேர்தலை விஞ்சும் வகையில், ரயில்வே கூட்டுறவு நாணய சங்க தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பிரியாணி, மதுபானம் வழங்கியது ஜனநாயகத்தை கேள்விக்கூத்தாக்கி உள்ளது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டனர்.