Published : 29 Dec 2017 10:23 AM
Last Updated : 29 Dec 2017 10:23 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிமீறல்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும்: சென்னை போக்குவரத்து துணை ஆணையர் தகவல்

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை சிசிடிவி உதவியுடன் நேரடியாக கண்காணிக்கும் வகையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை வசதி (ஐடிஎம்எஸ்) அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து காவல் துணை ஆணையர் (வடக்கு) டி.சண்முகபிரியா தெரிவித்தார்.

கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) மற்றும் டெல்லியில் உள்ள கன்சியூமர் வாய்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து கார் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தின. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை போக்குவரத்து காவல் துணை ஆணையர் (வடக்கு) டி.சண்முகபிரியா பேசியதாவது:

``சென்னையில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தினந்தோறும் தலைக்கவசம் அணியாத ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. வாகன ஓட்டிகள் ஏற்படுத்தும் விபத்துகளால் பாதசாரிகள் உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை வசதி (ஐடிஎம்எஸ்) அமல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் அமலாகும்போது போக்குவரத்து விதிமீறல்களை சிக்னல்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கட்டுபாட்டு அறையில் இருந்தே நேரடியாக கண்காணிக்க முடியும். அதோடு, விதிகளை மீறுவோரை கண்டறிந்து தண்டனை அளிக்க முடியும்” என்றார்.

கன்சியூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நிர்மலா தேசிகன் பேசும்போது, “கார் விற்பனையில் உலக அளவில் இந்தியா 6-வது இடத்தில் உள்ளது. அதேபோன்று, இந்தியாவில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

தினந்தோறும் 400 பேர் உயிரிழப்பு

சாலை விபத்துகளால் இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 400 பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவ்வாறு விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படுவதற்கு கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இருப்பது ஒரு காரணமாகும். எனவே, கார் வாங்கும்போது ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கவனத்தில் கொண்டு நுகர்வோர் வாங்கினால் 30 சதவீத உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்” என்றார்.

இந்த கருத்தரங்கில் கன்சியூமர் வாய்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஹேமந்த் உபாத்யாய், சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கரன், காப்பீட்டு ஆலோசகர் டி.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x