Published : 12 Dec 2017 09:26 AM
Last Updated : 12 Dec 2017 09:26 AM

தினகரன் ஆதரவாளர்கள் 5 பேர் வழிப்பறி வழக்கில் கைது: போலீஸை கண்டித்து சாலை மறியல்

சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 5 பேர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து தினகரன் ஆதவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தினகரனின் ஆதரவாளர்கள் 3 பேர் கடந்த 1-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தினகரன் ஆதரவாளர்களான கொருக்குப்பேட்டை நந்தகுமார், அவரது மகன் சரத்குமார் ஆகிய இருவரையும் செம்பியம் போலீஸாரும் சத்தியமூர்த்தி, ஆசைத்தம்பி, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரை கொடுங்கையூர் போலீஸாரும் நேற்று முன்தினம் இரவு கைது செய்துள்ளனர். இவர்கள் 5 பேரும் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் தினகரனுக்கு ஆதரவாக ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டவர்கள் என்றும், போலீஸார் வேண்டுமென்றே பொய் வழக்கில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தினகரன் தரப்பினர் தெரிவித்துள்ளனர். போலீஸாரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கொருக்குப்பேட்டை ரவுண்டானா சந்திப்பில் தினகரன் ஆதரவாளர்கள் 75-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராகவும், போலீஸாருக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

தகவல் அறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்த பகுதியில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்படுவதாக புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x