

தமிழகத்திலேயே முதன்முறையாக திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் வெங்காயம் விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இதனால் வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.
குறுகிய கால பயிரான வெங்காயம் (55 முதல் 60 நாட்கள்) திருச்சி மாவட்டத்தில் துறையூர், உப்பிலியபுரம், தாத்தையங்கார் பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஏறத்தாழ 4,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், அறுவடை செய்யப் படும் வெங்காயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடி யாமல் மிகக்குறைந்த விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்தநிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியரிடம் விவசா யிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை அடுத்து ஆட்சியர் ஜெய முரளிதரன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறையி னருக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து துறையூரில் உள்ள வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் மூலம் வெங்காயத்தை மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. முதன்முறையாக புதன் கிழமை வெங்காய விற்பனைக்கான மறைமுக ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் 5 விவசாயிகளும், 4 வியாபாரிகளும் பங்கேற்றனர். இந்த மறைமுக ஏலத்தில் 1,352 கிலோ சின்ன வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.16 வரையிலும், சராசரி விலையாக கிலோ ரூ.13-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து வேளாண் வணிகத் துறையின் துணை இயக்குநர் ஆர்.சந்திரசேகரன் ‘தி இந்து’விடம் கூறியது: வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திலேயே முதன் முறையாக வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் மூலம் வெங்காயத்துக்கு மறைமுக ஏலம் துறையூரில் உள்ள விற்பனைக் கூடத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்ற விவ சாயிகளுக்கு அதன் ரகத்துக்கும், தரத்துக்கும் தகுந்த விலை கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) வெங்காயத்துக்கு மறைமுக ஏலம் நடத்தப்படவுள்ளது. இதில் அதிக அளவில் விவசாயி கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க் கிறோம் என்றார்.
தற்போது, வெங்காயத்தின் விலை சந்தையில் ஏறுமுகத்தில் இருந்தாலும், அதனை பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற நிலைதான் இருந்தது. தற்போது வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் பலனடைவார்கள் என்பது நிச்சயம்.