

கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்களை கண்டித்து மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் கே.கந்தசாமி தலைமையில் பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக்குழு துணைத் தலைவரும் திண்டுக்கல் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பாலபாரதி செய்தியாளர்களிடம் கூறியது:
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு சில மாதங்களில் 5-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதில் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள, பிச்சம்பட்டியைச் சேர்ந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன் கொடுமையை கரூர் மாவட்ட காவல்துறை வேடிக்கை பார்க் கிறது. அலட்சியம் காரணமாக விசாரணையில் காலதாமதம் செய்துவருகிறது. இதனால் பெண்களின் கற்புக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட் டுள்ளது. இதுகுறித்து சட்டப் பேரவையில் எடுத்துரைப்பேன்.
குற்றம் நடந்து பல நாள்களான நிலையில் குற்றவாளியை கைது செய்யாத மாவட்ட காவல் துறையைக் கண்டித்து சாலை மறியல் செய்யவுள்ளோம்.
மாவட்ட நிர்வாகம் மெத்தனப் போக்கை விட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு சட்டரீதியாக பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கவேண்டும் என்றார்.