Published : 17 Aug 2023 08:56 PM
Last Updated : 17 Aug 2023 08:56 PM
சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், பாம்பன் ஊராட்சி, அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று, அங்குள்ள மீனவர் குடும்பத்தினருடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், "ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நாளை (18.8.2023) நடைபெறவுள்ள தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்தும் மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில், அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று மீனவப் பெருமக்களிடம் அவர்களது தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, அப்பகுதி மக்கள் குடியிருப்பு பட்டா வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். பட்டா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து இருக்கிறீர்களா என்று அங்குள்ள பெண்களிடம் கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் முதல்வர் பெற்றுக் கொண்டார்.
அக்காள்மடம் மீனவர் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடி, அவர்களது படிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT