

சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 1,428 நியாயவிலைக் கடைகளிலும் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப்பதிவு முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்திட மொத்தம் உள்ள 1,428 நியாயவிலைக் கடைகளில் முதற்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,730 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் 24.07.2023 அன்று தொடங்கி 04.08.2023 வரை நடைபெற்றன.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 724 நியாயவிலைக் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,781 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் 05.08.2023 முதல் 14.08.2023 வரை இரண்டாம் கட்டமாக நடைபெற்றன. இதற்காக முன்கூட்டியே முதற்கட்ட முகாமுக்கு உட்பட்ட பகுதிகளில் 6,32,637 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்ட முகாமுக்கு உட்பட்ட பகுதிகளில் 6,18,045 விண்ணப்பங்களும் என மொத்தம் 12,50,682 விண்ணப்பங்கள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலமாக வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டன.
இம்முகாம்களில் 1,428 முகாம் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்தனர். 1,428 உதவி தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு முகாமுக்கு வருகை புரியும் குடும்பத் தலைவிகளுக்கு விண்ணப்பத்தில் உள்ள ஐயங்களை களைந்து சிறப்புற பதிவு செய்ய உதவி புரிந்தனர். மேலும் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர்கள் என்ற கணக்கில் 3,511 விண்ணப்பப் பதிவு தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு செய்தனர்.
காவல்துறை சார்பில் 3,030 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, 325 நகரும் குழுக்கள் அமைக்கப்பட்டு விண்ணப்ப முகாம்களில் கூட்ட நெரிசல் ஏற்படா வண்ணம் கண்காணித்து கொள்ளப்பட்டது. முதற்கட்ட சிறப்பு முகாம்களின் மூலமாக 04.08.2023 வரை 4,70,301 விண்ணப்பங்களும், இரண்டாம் கட்டம் மூலமாக 14.08.2023 வரை 4,38,079 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆக மொத்தம் இரு கட்டங்களாக நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலமாக 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 1,428 நியாயவிலைக் கடைகளிலும் முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்கு 18.08.2023 முதல் 20.08.2023 வரை மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். மேற்படி சிறப்பு முகாம்கள் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தில் எங்கெங்கு நடத்தப்பட்டனவோ, அவ்விடங்களிலேயே விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறும். மேலும், சிறப்பு முகாம் நடைபெறும் இடம், முகவரி குறித்த விவரங்கள் நியாயவிலைக் கடைகளிலும் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத் தேவையில்லை. விண்ணப்பப்பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகக் கட்டுப்பாட்டு அறையின் 044-25619208 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 15 மண்டலங்களுக்கும் தனித்தனியே கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்ணையோ தாங்கள் சம்மந்தப்பட்ட மண்டலத்தின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களையோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமையிட கட்டுப்பாட்டு அறையின் 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், 1913 என்ற அழைப்பு மைய எண்ணிலும் தொடர்புகொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.