

சென்னை: திமுக ஆட்சிக்காலம் நிறைவடைவதற்குள் 4 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சுதந்திர தின விழா உரையில், வரும் ஆண்டுகளில் 55 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று, முதல்வர் பெருமையாகக் கூறியிருப்பது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையிலேயே 3.5 லட்சம்அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 27 மாதங்கள்கடந்துள்ள நிலையில், 15,000 அரசுப் பணியிடங்கள்கூட நிரப்பப்படவில்லை. கடந்த 27 மாதங்களில் ஓய்வு பெற்றோர், விருப்ப ஓய்வில் சென்றோர் ஆகியவற்றைக் கணக்கிட்டால், தற்போதைய காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 4 லட்சமாக இருக்கும்.
திமுக ஆட்சியின் மீதமிருக்கும் காலத்துக்குள், காலியாக இருக்கும் அனைத்து பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி வரும் இரண்டரை ஆண்டுகளில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.