Published : 17 Aug 2023 06:10 AM
Last Updated : 17 Aug 2023 06:10 AM

ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையம்

சென்னை: தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் 4 நிறுவனங்கள் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே சிப்காட் தொழிற்பூங்காவில் இந்தியாவின் முதல் ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின்கீழ் (டிடிஐஎஸ்), இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான (ட்ரோன்) சோதனை மையத்தை அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) திட்டமிட்டது. மத்திய அரசின் மானியத்துடன் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளியை கோரியது.

ரூ.45 கோடி மதிப்பீடு: அதன் அடிப்படையில், கெல்டிரான், சென்ஸ் இமேஜ், ஸ்டாண்டர்டு டெஸ்டிங் அண்ட் காம்ப்ளையன்ஸ் மற்றும் அவிக்ஷா ரீடெய்லர்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் டிட்கோ வுடன் இணைந்து ரூ.45 கோடி மதிப்பீட்டில் ட்ரோன் சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஆளில்லா விமானத்தின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனைகளுக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் சர்வதேச தரத்தில் வழங்கும்.

இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற்பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. ஆளில்லா விமான உற்பத்தியில் தமிழகம் சர்வதேச மையமாக திகழவும், பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தற்சார்புத் தேவையைப் பூர்த்தி செய்யவும் இச்சோதனை மையம் வழிவகுக்கும்.

இந்தியாவின் முதல் பொது ஆளில்லா விமான சோதனை மையம் தமிழகத்தில் அமைய இருப்பது, வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்திச் சூழலில் உயரிய இடத்தை தமிழகம் அடையவேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டு.

வான்வெளி மற்றும் பாதுகாப்புநிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு விருப்பமான இடமாக தமிழகத்தை மாற்றஇந்த சோதனை மையம் உதவும்.இத்துறை மேலும் வளர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இம்முயற்சிகளுக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x