Published : 29 Dec 2017 09:11 AM
Last Updated : 29 Dec 2017 09:11 AM

சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு: ஆய்வு மையத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்ட முடிவு

சென்னையில் நேற்று நடந்த ஐஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், ஐஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னை ஐஐடி விளங்குகிறது. இங்கு படித்த பழைய மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 1964, 1972, 1977, 1982, 1997, 2007-ம் ஆண்டுகளில் படித்த முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 1992-ம் ஆண்டில் படித்த மாணவர்கள், தங்கள் பழைய மாணவர் சந்திப்பு வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஐஐடி ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையத்துக்கும், நிர்மான் ஆய்வு மையத்துக்கும் ரூ.10 கோடி நிதி திரட்டுவதாக உறுதிமொழி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐஐடி பேராசிரியரும், ரயில்வே அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகருமான அசோக் ஜுஞ்சுன்வாலா, “பேட்டரியால் இயங்கும் மின் வாகனங்கள் உற்பத்தியில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிடில் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நேரிடும்” என்றார். ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான விருதுகளை அறிவித்தார். இந்த விருதுகள் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஐஐடி ஆண்டுவிழாவில் வழங்கப்படும் என்றார்.

முன்னாள் மாணவரான அஜித் சிங்வி, மேலாண்மைத் துறையில் தனது பெயரில் அறக்கட்டளை நிறுவுவதற்காக ரூ.1 கோடியே 50 லட்சம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டீன் (சர்வதேச மற்றும் முன்னாள் மாணவர் விவகாரங்கள்) பேராசிரியர் ஆர்.நாகராஜன், பழைய மாணவர் சங்க அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் எம்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x