

கோவை / திருப்பூர்: கோவை அருகே, விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு தனது காரில் ஆ.ராசா எம்.பி அனுப்பி வைத்தார்.
திருப்பூரைச் சேர்ந்தவர் தமிழ் செல்வன் (22). இவர், நேற்று முன்தினம் கோவை வந்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவிநாசி சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, அவரது இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வன் கீழே விழுந்து காயமடைந்தார்.
அந்த சமயத்தில் அன்னூர் மற்றும் அவிநாசி பகுதிகளில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளரான ஆ.ராசா எம்.பி, சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். விபத்தில் இளைஞர் சிக்கியதை அறிந்த ஆ.ராசா, தனது வாகனத்தை நிறுத்தி இறங்கி வந்தார். அவருடன் வந்த கட்சி நிர்வாகியான மருத்துவர் கோகுல் தமிழ் செல்வனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
தொடர்ந்து, ஆ.ராசா தனது காரில் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தமிழ் செல்வனை அனுப்பி வைத்தார். மேலும், இளைஞருக்கு வழங்கப்படும் சிகிச்சை நிலவரம் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆ.ராசா எம்.பி தொலைபேசி மூலம் விசாரித்து, இளைஞரின் உடல்நிலையை கேட்டறிந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.