Published : 03 Dec 2017 07:45 AM
Last Updated : 03 Dec 2017 07:45 AM

நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அறிமுகம்: வழக்கறிஞர்களின் ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் திட்டம் - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடங்கி வைத்தனர்

சென்னை ஐஐடி பேராசிரியர் இலவசமாக உருவாக்கிக் கொடுத்த தொழில்நுட்ப உதவியால், வழக்கறிஞர்களின் ஆவணங்களை ஆன்லைனில் சரிபார்க்கும் திட்டத்தை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தொடங்கி வைத்தனர். இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

போலி வழக்கறிஞர்களை களையெடுக்க, ஆன்லைன் மூலம் ஆவணங்களை சரிபார்க் கும் திட்டம், இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா மற்றும் 815 இளம் வழக்கறிஞர் கள் தமிழக பார் கவுன்சிலில் பதிவு செய்யும் விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.

அகில இந்திய பார் கவுன்சில் இணைத் தலைவர் பிரபாகரன் வரவேற்றுப் பேசினார். ஆன்லைனில் ஆணவங்களை சரிபார்க்கும் திட்டத்தை தொடங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.பானுமதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இளம் வழக்கறிஞர்களிடையே நீதிபதி குரியன் ஜோசப் பேசும்போது, ‘‘பிறந்தநாள் போல வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் தேதியையும் நீங்கள் மறக்கக் கூடாது. அரசியலமைப்பு சட்ட விதிகளை மதித்து நடப்பேன் என இப்போது எடுக்கும் உறுதி மொழியை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர் என்ற ஆயுதம் உங்களிடம்தான் உள்ளது. உங்களது சேவை அடித்தட்டு மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். ஆனால் அதற்காக ஒருபோதும் சட்டத்தை உடைக்கும் வகையில் செயல்படக் கூடாது’’ என்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி பேசும்போது, ‘‘நாடு முழுவதும் 15 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். இதில் போலி வழக்கறிஞர்களும் அதிக அளவில் உள்ளனர். அவர்களை களையெடுப்பதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ஆன்லைன் மூலமாக வழக்கறிஞர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் திட்டத்தை இலவசமாக செய்து வழங்கிய ஐஐடி பேராசிரியர் அசோக் ஜூஞ்ஜூன்வாலாவை மனதார பாராட்டுகிறேன். இளம் வழக்கறிஞர்கள் தங்களை வளர்த்துக்கொள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் தீர்ப்பு திரட்டுகளை தினமும் படித்து சட்ட அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன், எம்.வி.முரளிதரன், எம்.கோவிந்தராஜ், தமிழக பார் கவுன்சில் பொறுப்புத் தலைவரும் அரசு தலைமை வழக்கறிஞருமான விஜய் நாராயண், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபால், ஐஐடி பேராசிரியர் அசோக் ஜுஞ்ஜுன்வாலா, பார் கவுன்சில் நிர்வாகிகள் விழாவில் பங்கேற்றனர். பார் கவுன்சில் உறுப்பினர் என்.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x