Published : 17 Aug 2023 06:10 AM
Last Updated : 17 Aug 2023 06:10 AM
சென்னை: தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாயப் பாதுகாப்புகமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மீனவ மக்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டக் குழு வரைபடத்தில் நீக்கப்பட்டுள்ள தமிழக மீனவக் கிராமங்கள், மீன்பிடிப் பகுதிகள், மீனவர்களின் நீண்டகால வாழ்விடங்கள் ஆகியவற்றை சேர்க்கும் வரை, கருத்து கேட்புக் கூட்டம் நடத்தக் கூடாது.
ஆறு, ஏரி, குளம், குட்டை மற்றும் அணைகளில் மீன்பிடிக்கும் உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அதன் மீன்பிடி உரிமைகளை உள்ளூர் மீனவருக்கே வழங்க வேண்டும்.
சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் வரை கடலையும், கடற்கரையையும் சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை உடனே ரத்து செய்ய வேண்டும்.
எண்ணூர் பகுதியில் அனல்மின் நிலையத்தால் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவமக்களுக்கு, அனல்மின் நிலையம் மற்றும் அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
மயிலை நொச்சிக்குப்பம் மீனவ மக்களின் பயன்பாட்டு நிலத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பங்குத் தொகையை ரூ.1.50 லட்சமாக நிர்ணயித்து, உடனடியாக நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு குடியிருப்புகளை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT