மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: ஊரப்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் மரணம்

மதுராந்தகம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு: ஊரப்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் 2 இளைஞர்கள் மரணம்
Updated on
1 min read

மதுராந்தகம்/ஊரப்பாக்கம்: மதுராந்தகம் அருகே அய்யானார் கோயில் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதேபோல், ஊரப்பாக்கத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் மரணமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே மதுராந்தகம் ஏரி உயர்மட்ட கால்வாய் பாலம் உள்ளது. இந்நிலையில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்னையை நோக்கி வந்த கார் ஒன்று நிலை தடுமாறி உயர்மட்ட கால்வாய் பாலத்தின், தடுப்பு சுவரில் மோதி கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், நிலக்கோட்டையை சேர்ந்த கதிரவன்(30), மன்னார்குடியை சேர்ந்த நந்தகுமார்(55), திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(35) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒருமணி நேரம் போராடி காரையும் உடல்களையும் மீட்டு, பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த நபர்களில் இருவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்துக்கு பணியில் இணைவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடக்கிறது.

ஆத்தூர் சுங்கச்சாவடி முதல் பெருங்களத்தூர் வரை உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆக. 1-ம் தேதி முதல் நேற்று வரை வாகன விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.

லாரி மோதி விபத்து: சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள துரைப்பாக்கம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (27), தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (27), இருவரும் நண்பர்கள். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினீயராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் பைக்கில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு சென்னை நோக்கி அதே பைக்கில் வந்து கொண்டிருந்தனர். நேற்று இரவு 2 மணி அளவில் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் பைக் பயங்கரமாக மோதியது.

இதில் பைக்கை ஓட்டி வந்த விக்னேஷ் பலத்த காயமடைந்து அதே இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் ராஜ்குமாரை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார் சிகிச்சைப் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in