Published : 17 Aug 2023 06:03 AM
Last Updated : 17 Aug 2023 06:03 AM

ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவு

சென்னை: திருப்போரூரை அடுத்த நெமிலியில் தனக்குச் சொந்தமான சொத்துகளுக்கு ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதால், அந்தப் பட்டாவை ரத்து செய்யக் கோரி கே.எம்.சாமி என்ற முனுசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ‘‘ஆளவந்தார் தனது சகோதரர் மகன் முத்துகிருஷ்ணனுக்கு எழுதி வைத்த சொத்துகளில் சிலவற்றை, அவரதுஉறவினரான தனக்கு எழுதி வைத்துள்ளதாகவும், ஆனால் அந்த சொத்துகளை ஆளவந்தார் அறக்கட்டளை பெயருக்கு அதன் நிர்வாகிகள் சட்ட விரோதமாக மாற்றிவிட்டதாகவும், எனவே ஆளவந்தார் அறக்கட்டளை பெயரில் உள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், முத்துகிருஷ்ணன் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இறப்புச் சான்றிதழ் போலியானது என்று கூறி, அது தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும், ஆளவந்தாரால் கோயில்களுக்கு தானமாக எழுதி வைக்கப்பட்ட சொத்துகளின் விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

அதையடுத்து நீதிபதி, முத்துகிருஷ்ணன் 1997-ல் இறந்ததாக மனுதாரரும், 1936-ம்ஆண்டே இறந்து விட்டதாக அரசுத் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,இதில் எந்த இறப்புச் சான்றிதழ் உண்மையானது என்பதைக் கண்டறிய, போலீஸில் புகார் அளிக்குமாறு நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘1943-ம் ஆண்டு முத்துகிருஷ்ணனின் மகன் உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, மனுதாரரான கே.எம்.சாமி தாக்கல் செய்துள்ள இறப்புச் சான்றிதழ் உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே, போலியான இறப்புச் சான்றிதழை தாக்கல் செய்தவர்கள் மற்றும் அதைத் தயாரித்தவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது போலீஸார் சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்கும் மேலாளராகவே முத்துகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய மறைவுக்குப் பிறகு ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. அதேபோல, அறக்கட்டளைக்குத் தானமாக வழங்கப்பட்ட சொத்துகளை தனி நபர்களின் பெயர்களுக்கும் மாற்ற முடியாது. எனவே மனுதாரர் தாக்கல்செய்துள்ள மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும், ஆளவந்தார் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலங்களைக் கண்டறிந்து அதில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை 4 வாரங்களில் அகற்ற இந்து சமய அறநிலையத் துறையினர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துகளில் இருந்து ஈட்டப்படும் வருமானத்தை, அந்த அறக்கட்டளை எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக செலவிட வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x