Published : 17 Aug 2023 06:13 AM
Last Updated : 17 Aug 2023 06:13 AM
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் பகலில் நடைமேடை டிக்கெட் எடுக்காமல் இளைஞர்கள் சிலர் சுற்றித் திரிவதாகப் புகார் வந்தது. இதையடுத்து, துணைநிலை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, முதலாவது நடைமேடைக்குச் சென்று கண்காணித்தார்.
அப்போது, ஓர் இளைஞரைப் பிடித்து சோதித்தபோது, அவரிடம் டிக்கெட் இல்லை. இதையடுத்து, அவரை டிக்கெட் பரிசோதகர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து, தலைமை டிக்கெட் பரிசோதகர் ஹரிஜான் முன்னிலையில் விசாரித்தார்.
அந்த இளைஞரை அபராதம் செலுத்துமாறு கூறியபோது, தன்னிடம் பணம் இல்லை என்று கூறி, ரயில்வே அலுவலர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த, துணைநிலை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்தாராம். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, துணைநிலை பரிசோதகர் அக்ஷயா மற்றும் தலைமைப் பரிசோதகர் ஹரிஜான் ஆகியோரிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்துரயில்வே அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
டிக்கெட் இல்லாதவரிடம் அபராதம் வசூலித்திருக்கலாம் அல்லது ஆர்பிஎஃப் போலீஸாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் கன்னத்தில் அறைந்தது தவறு. எனவே, பணியிடை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT