Published : 11 Dec 2017 06:01 PM
Last Updated : 11 Dec 2017 06:01 PM

அரசியல் பின்புலம் உள்ளவர்கள் பார்கவுன்சிலில் போட்டியிட அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை

பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க அரசியல் கட்சி நிர்வாகிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர் இரு பிரிவினருக்கிடையில் ஏற்பட்ட பிரச்னையில் வழக்கறிஞர்கள் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து நடந்ததாக நீதிபதி கிருபாகரன் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், வழக்கறிஞர்கள் பதிவு, சட்ட கல்லூரிகள் தொடர்பாக எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு இந்திய பார் கவுன்சில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதே சமயம் பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கின் விசாரணையை டிசம்பர் 13ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளார்.

மேலும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழான குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தால், அவர்களை பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது எனவும், பார் கவுன்சிலில் அரசியல் நுழைவதை தடுக்க அரசியல் கட்சியில் பதவி வகிப்பவர்கள், மக்கள் பிரதிநிதிகளாக இருப்பவர்களையும் பார் கவுன்சில் தேர்தலில் அனுமதிக்க கூடாது எனவும் இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதி ஆலோசனை கூறியுள்ளார்.

தனது ஆலோசனைகளை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள அனில் தவே குழுவிடமும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் இந்திய பார் கவுன்சிலுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x