Published : 11 Dec 2017 10:41 AM
Last Updated : 11 Dec 2017 10:41 AM

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ‘ஏரறிஞர்’ விருது: சென்னையில் நடந்த விழாவில் வெங்கய்ய நாயுடு வழங்கினார்

சென்னையில் நடந்த விழாவில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு “ஏரறிஞர்” விருதினை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

தமிழ் வேளாண் அறிவியல் சங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் ஆகியன சார்பில் “ஏரறிஞர்” விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு “ஏரறிஞர்” விருது வழங்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் தன்னிகரற்ற சாதனையைக் கொண்டாடும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். நம் நாட்டில் உணவுப் பாதுகாப்பு ஏற்பட்டிருப்பது மட்டுமல்லாமல் உணவு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தி செய்கிறோம் என்றால் அதற்கு எம்.எஸ். சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வையே காரணம்.

தாய்நாட்டுக்கு சேவை

உணவு உற்பத்தியை மேலும் பெருக்குவதுடன் மதிப்பு கூட்டுவதை மேம்படுத்துவதிலும் விவசாயக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கவனம் செலுத்த வேண்டும். வேளாண்மைக்கு உதவும் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் விவசாயிகள் சுரண்டப்பட மாட்டார்கள் என்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை உரையாற்றினார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ். சுவாமிநாதன் ஏற்புரையில், “வேளாண்மை சம்பந்தப்பட்ட மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து “ஏரறிஞர்” விருதினை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியாவுக்கே பெருமை

அதுவும் விவசாயியாக இருந்து குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள வெங்கய்ய நாயுடு கையால் பெற்றது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும். நம் நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் நிரந்தர பசுமைப் புரட்சியும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.திலகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x