Published : 19 Dec 2017 10:33 am

Updated : 19 Dec 2017 13:49 pm

 

Published : 19 Dec 2017 10:33 AM
Last Updated : 19 Dec 2017 01:49 PM

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் மின்னணு ஆதாரங்களை ஒப்படைக்க வருமானவரித் துறை மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு ஏஎஸ்பி வழக்கு

தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கிய வழக்கில் கைப்பற்றப்பட்ட லேப்-டாப், பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க வருமானவரித் துறை மறுத்துள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனைக்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட ஏஐடியூசி செயலாளர் கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு, “குட்கா லஞ்ச வழக்கில் அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதால், இந்த வழக்கை மாநில லஞ்ச ஒழிப்பு ஆணையர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்க வேண்டும். இந்த முறைகேடு தொடர்புடைய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு ஆணையரிடம் வருமானவரித் துறை வழங்க வேண்டும்.

குட்கா முறைகேடு தொடர்பாக அப்போதைய தலைமை செயலரிடம் வருமான வரித்துறை அளித்த ஆவணங்கள் மாயமானது தொடர்பாக விசாரித்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஏற்கெனவே உத்தரவிட்டது.

இதையடுத்து குட்கா முறைகேடு குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி வி.கே. ஜெயக்கொடி என்பவரை தமிழக அரசு நியமனம் செய்தது.

இதற்கிடையே, சென்னை கோடம்பாக்கத்தில் குட்கா தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கைப்பற்றப்பட்ட லேப்டாப், பென்டிரைவ், ஹார்டுடிஸ்க் உள்ளிட்ட மின்னணு சேமிப்பு கருவிகளை கேட்டு வருமான வரித்துறைக்கு, லஞ்ச ஒழிப்பு தனிப்படையினர் கடிதம் அனுப்பினர்.

இந்த ஆதாரங்களை வழங்க மறுத்த வருமான வரித்துறை, “விசாரணை நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே ஆவணங்களை வழங்க முடியும்” என தெரிவித்துள்ளது.

இதையடுத்து குட்கா நிறுவனத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்களை ஒப்படைக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிடக்கோரி குட்கா வழக்கின் விசாரணை அதிகாரியும், லஞ்ச ஒழிப்புத்துறை ஏஎஸ்பியுமான சி.எம்.பாலசுப்பிரமணியன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “குட்கா வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டபோது அனைத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை ஒப்படைக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருமான வரித்துறையினர் கைப்பற்றிய மின்னணு சாதனங்களை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author