மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு

மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை கோரி வழக்கு
Updated on
1 min read

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிரில் ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் மிக அருகில் உள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. மதுரை விமான நிலையம் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் மற்றும் போலீஸாரின் கண்காணிப்பில் உள்ளது.

அதிமுக மாநாட்டுக்கு சுமார் 15 லட்சம் பேர் வருவதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் மாநாடு நடைபெறும் நாளில் விமானம் தரையிறங்கும் போது இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் அசம்பாவிதம் நடைபெற்றால் பெரும் பாதிப்பு ஏற்படும். இப்பகுதி பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக விமான போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை கவனத்தில் கொள்ளாமல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை சுற்றி 20 கி.மீ தொலைவிற்கு உரிய அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் விளம்பர பலகைகள் கூட வைக்க முடியாது. மாநாட்டுக்கு அனுமதி பெற மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருபவர்களால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே, ஆக. 20-ல் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும். மாநாடு நடத்த அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in