

மதுரை: மின்வாரிய ஊழியர்கள் கவனக்குறைவால் மின் கம்பத்தை கிரேனில் தூக்கி மாற்றும்போது தவறி விழுந்து மதுரையை சேர்ந்த தேசிய ஜூடோ விளையாட்டு வீரர் கால் பறிப்போனது. சர்வதேச விளையாட்டில் சாதிக்கும் கனவுடன் இருந்த இவரின் விளையாட்டு எதிர்காலம் முடிவுக்கு வந்த நிலையில், அந்த வீரருக்கு அரசுப் பணி வழங்கி இருள் சூழ்ந்த அவரது வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரை கோச்சடையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தீர்த்தம் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (17) . இவர், பாண்டிபாஜாரில் அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ் டூ முடித்துள்ளார். தேசிய ஜூடோ விளையாட்டு வீரரான இவர், மாநில போட்டியில் வெற்றிப் பெற்று கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரியில் நடந்த போட்டியில் தமிழக அணிக்காக பங்கேற்று இந்திய அளவில் 5-வது இடம் பெற்றார். ஆகஸ்ட் 5-ம் தேதி திருப்பூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தயாரானார்.
இதில் வெற்றி பெற்றால் ஆக.28-ல் டெல்லியில் நடைபெறும் ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் சூழலில் இருந்தார். இந்நிலையில் கோச்சடை அருகே முத்தையா கோயில் அருகே கடந்த ஜூலை 26ம் தேதி பழைய மின்கம்பத்திற்கு பதிலாக புது மின் கம்பம் மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆட்கள் பற்றாக்குறையால் அவர்கள், அந்த வழியாக வந்த பொதுமக்களை எச்சரிக்கை செய்யாமலே கவனக்குறைவாக மின் கம்பத்தை அகற்றி கிரேனில் தூக்கியுள்ளனர். பழைய மின்கம்பம் என்பதால் அது உடைந்து அந்த வழியாக வந்த ஜூடோ வீரர் விக்னேஷ்வரன் மீது விழுந்துள்ளது. தலையில் விழாமல் இருக்க அவர் தப்பியோடியபோது அவரது இடது காலில் விழுந்தது.
சம்பவ இடத்திலே சரிந்து விழுந்த அவரை பொதுமக்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விக்னேஷ்வரனின் கணுக்கால் அகற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அதேபகுதியில் கொஞ்சம் கால் அகற்றப்பட்டு முட்டிக்கு கீழே 17 செ.மீ., அளவுக்கு மட்டுமே கால் இருக்கிறது.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் கனவுடன் இருந்த விக்னேஷ்வரின் விளையாட்டு வாழ்க்கை, இந்த எதிர்பாராத விபத்தால் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் விக்னேஷ்வரனை பார்த்து தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் சீனியர் துணைத் தலைவர் சோலை ராஜா ஆறுதல் தெரிவித்தார்.
சோலை ராஜா கூறுகையில், "இந்த விபத்து மட்டும் நேரிடாமல் இருந்தால் எதிர்காலத்தில் விக்னேஷ்வரன் சர்வதேச அளவில் ஜொலித்து இருப்பார். பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் மின் கம்பம் அகற்றப்பட்டதாலே இந்த விபத்து நேரிட்டது. இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். வெறும் பணம் உதவி மட்டும் இந்த வீரருக்கு வாழ்க்கைக்கு உதவாது.
விளையாட்டு இடஒதுக்கீட்டில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினிரிங் ‘சீட்’ கிடைத்த நிலையில் இந்த சூழல்நிலையுடன் படிக்க ஆசைப்பட்டான். ஆனால், மீண்டும் கொஞ்சம் கால் அகற்றப்பட்டதால் அவரால் இனி நடக்க முடியாது. ஊன்றுகோல் உதவியுடனே நடக்க முடியும். இவரின் தாய் மாற்றுத் திறனாளி. தம்பி 8ம் வகுப்பு படிக்கிறார். அவரது தந்தை இவர்களுடன் தற்போது இல்லை. அதனால், மதுரைக்கு இன்று வரும் முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட ஜூடோ வீரர் விக்னேஷ்வரனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதோடு அவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிடுவதே பொருத்தமானதாக இருக்கும்’’ என்றார்.