

சென்னை: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அவசர கதியில் சுரங்கப் பாதை திறக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகராக உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 22 விரைவு ரயில்களும், 170 புறநகர் மின்சார ரயில்களும் தினசரி நின்று செல்கின்றன.
திருவள்ளூர் ரயில் நிலையத்தில், பொதுமக்கள் இருப்புப் பாதையைக் கடந்து செல்வதற்காக ரூ.6 கோடி மதிப்பீட்டில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்பணி நிறைவடைந்து இம்மாதம் 5-ம் தேதியன்று திறக்கப்பட்டது. பயணிகளுக்குத் தேவையான வசதிகள் முழுமையாக செய்து முடிக்காமல் அவரச கதியில் திறக்கப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, மண்டல ரயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் கூறியதாவது: திருவள்ளூர் ரயில் நிலையத்தை தினமும் 1.4 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
மணவாள நகர், பெரியகுப்பம் ஆகிய இருபகுதிகளுக்கு நடுவே இந்த ரயில் நிலையம் அமைந்துள்ளதால், இரு பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களும், பயணிகளும் இந்த சுரங்கப் பாதையை பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வரும் இந்த சுரங்கப் பாதையில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
சுரங்கப் பாதைக்குள் போதிய மின்விளக்கு வசதிகள் செய்யப்படவில்லை. அதேபோல், எமர்ஜென்சி விளக்கும் பொருத்தப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் சுரங்கப்பாதை முழுவதும் இருளில் மூழ்கும்.
இதனால், பயணிகள் பாதுகாப்பு, குறிப்பாக பெண் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சுரங்கப் பாதையின் மேற்கூரையில் பூச்சுவேலை சரியாக செய்யப்படவில்லை. இதனால், சிறிய மழைக்கே சுரங்கப் பாதைக்குள் நிறுவப்பட்டள்ள கான்கிரீட் பெட்டிகளின் இணைப்பில் நீர்க்கசிவு ஏற்படுகிறது.
அதேபோல், சுரங்கப் பாதையில் நடைமேடை செல்வதற்கான நடைமேடை எண் குறியீட்டு அறிவிப்பு பலகைகள் வைக்கப்படவில்லை. பொது அறிவிப்புக்கான ஸ்பீக்கர் வசதிகள், ரயில்களின் வருகை, புறப்பாடு நேரம் குறித்த மின்னணு அறிவிப்பு பலகைகளும் பொருத்தப்படவில்லை. சுரங்கப் பாதையில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்படாததோடு, குப்பைகளை சேகரிப்பதற்கான குப்பைத் தொட்டிகளும் வைக்கப்படவில்லை. இவ்வாறு பாஸ்கர் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருவள்ளூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போது, சுரங்கப் பாதையில் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றனர்.