

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தை கடத்தலை தடுக்க ‘கோடு பிங்க்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்த குறும்படம் தயாரிக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இது, மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு நம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாவட்ட அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு, 19 மருத்துவ துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் குழந்தைகள் நலப் பகுதியும் ஒன்று.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் பச்சிளம் குழந்தைககள் சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. அதன் ஒருபகுதியாக குழந்தை கடத்தலை தடுக்கவும், குழந்தைகள் காணாமல் போனால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ‘கோடு பிங்க்’ என்ற பெயரில் அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு குறும்படம் தயாரித்து, அவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
இது குறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா கூறியதாவது: பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மாதந்தோறும் சுமார் 200 முதல் 300 பிரசவங்கள் நடைபெறுகின்றன. பேறுகால அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தை பிறந்ததும், குழந்தையின் கால் ரேகை பதிவு செய்யப்படும். குழந்தையின் கையில் ‘பிங்க்’ நிறத்தில் அடையாள பேண்டு கட்டப்படுகிறது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இதுவரை கடத்தப்பட்ட 3 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் பெரும்பாலும் குழந்தை கடத்தல் என்பது பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில்தான் நடைபெறுகின்றன. இந்த பிரிவுக்கு வரும் பெண்களில் சிலர் குழந்தையை கவனித்துக் கொள்வதுபோல் நடித்து, குழந்தையின் தாய், உறவினர்கள் ஏமாந்த சமயத்தில் குழந்தையை கடத்தி விடுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், கடத்தப்பட்ட குழந்தையை விரைவில் மீட்கவும் ‘கோடு பிங்க்’ என்ற அவசர கால மீட்பு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தை காணாமல் போனதை குழந்தையின் தாய் அல்லது உறவினர் அங்குள்ள பணியாளர்களிடம் தெரிவித்தவுடன், செவிலியர் மற்றும் பணி மருத்துவர் வாயிலாக மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்படும்.
அடுத்த விநாடி, ‘கோடு பிங்க்’ என்ற அவசர கால நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு, மைக் மூலம் ‘கோடு பிங்க்’ என அறிவிக்கப்படும். இதையடுத்து மருத்துவமனை வளாகம் பாதுகாவலர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் இருந்து யாரும் வெளியில் செல்ல முடியாதவாறு நுழைவுவாயில் கதவுகள் மூடப்படும்.
புறக்காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படும். குழந்தைகள் நலப்பிரிவில் பொருத்தப்பட்டுள்ள 25 கேமராக்கள் மற்றும் மருத்துவமனையின் பிற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 36 கேமராக்களும் ஆய்வு செய்யப்படும். இதனால் குறைந்த நேரத்தில் கடத்தப்பட்ட குழந்தை மருத்துவமனை வளாகத்துக்கு உள்ளேயே மீட்கப்படும்.
மருத்துவமனைக்கு வெளியே குழந்தைகளை கொண்டு சென்றாலும், போலீஸாரின் உதவியுடன் விரைவில் மீட்கப்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம் என உறவினர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.