Published : 16 Aug 2023 05:26 AM
Last Updated : 16 Aug 2023 05:26 AM
சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோய் அறியாமல் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், மருத்துவத் துறையை திமுக அரசு சீரழிப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சமீபகாலமாக அரசு மருத்துவமனைக்கு சாதாரண நோய்களுக்கு சிகிச்சை பெற செல்லும் சாமானியர்களின் கால், கை, உயிரும் போகும் அவலம் திமுக ஆட்சியில் சாதாரணமாகிவிட்டது. சளிக்கு சென்றாலும் நாய் கடி ஊசி போடுகின்றனர்.
உண்மையிலேயே நாய் கடிக்கு சிகிச்சை கேட்டுச் சென்றால், ஊசி இல்லை என்ற நிலை உள்ளது. தசைப் பிடிப்புக்கு சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். தவறான சிகிச்சையால் ஒரு குழந்தையின் கை அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காமல் மருத்துவத்துறை சீரழிந்துள்ளது.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சருக்கோ ஓட்டப் பந்தயங்களைத் தொடங்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. அவர் மக்கள் நலன் காக்கும் அமைச்சரா அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் அமைச்சரா என்பது சந்தேகமாக உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் நோய்த்தன்மையை பரிசோதிக்காமல் கவனக்குறைவாக கையில் கிடைக்கும் மருந்துகளை செலுத்துவது மிகவும் கொடுமையானது. இதுபோன்ற தவறை யார் செய்தாலும் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, சுகாதாரத்துறை அமைச்சர் அவரது துறையில் கவனம் செலுத்தி, நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT