Published : 03 Nov 2017 09:28 AM
Last Updated : 03 Nov 2017 09:28 AM

ரூ.477 கோடி கட்டண பாக்கி காரணமாக புதிய குடிநீர் திட்டங்களுக்கு மின் இணைப்பு வழங்க தடை: மின்வாரிய அதிகாரிகளுக்கு மின்சார பகிர்மான கழக இயக்குநர் சுற்றறிக்கை

மின்வாரியத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் பாக்கி வைத்துள்ள ரூ.477.22 கோடி கட்டணப் பாக்கியை செலுத்தும் வரையில், புதிய குடிநீர் திட்டங்களுக்கு இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்சார வாரியம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வாரியமானது, தமிழகத்தில் 8 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 323 பேரூராட்சிகள், 46,438 கிராமங்கள் மட்டுமின்றி 532 தொழில் நிறுவனங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்து வருகிறது. தினமும் சராசரியாக 1,842 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், இதற்கான குடிநீர் கட்டணங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடும் நஷ்டத்தில் இயங்கிவரும் குடிநீர் வாரியம், ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம், பணிக்கொடை போன்றவற்றை வழங்கக்கூட நிதியில்லாமல் தள்ளாடிக் கொண்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு மின்சார பகிர்மானக் கழகத்தின் இயக்குநர், அனைத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், குடிநீர் வடிகால் வாரியமானது, மின்சார வாரியத்துக்கு மின் கட்டணமாக ரூ.477.22 கோடியை பாக்கி வைத்துள்ளதாலும், அதனை நீண்டகாலமாக செலுத்தாமல் இருப்பதாலும் புதிய குடிநீர் திட்டங்களுக்கு இணைப்பு வழங்கக்கூடாது என்றும், ஏற்கெனவே உள்ள குடிநீர் திட்டங்களுக்கான மின்சார அளவை உயர்த்த அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏஐடியுசி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்க மாநில கவுரவத் தலைவர் கே.கே.என்.ராஜன் கூறியதாவது: கடந்த 2016 முதல் 2017 வரை 330 புதிய குடிநீர் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதாவது, சுமார் 30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு தொடங்கத் தயாராக உள்ளன. இந்தச் சூழலில் மின்வாரியத்தின் இந்த உத்தரவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

குடிநீர் வடிகால்வாரியச் சட்டம் 1971 பிரிவு 23(3)ன்படி, உள்ளாட்சி அமைப்புகளால் குடிநீர் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை என்றால், அந்த நிதியை அரசே ஈடுசெய்ய வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக குடிநீர் வாரியத்தின் மின் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். மேலும், குடிநீர் வாரியத்தின் நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு ஈடு செய்ய வேண்டும். இல்லை என்றால், ஒட்டுமொத்தமாக குடிநீர் வாரியமே மூடப்படும் அபாயம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து குடிநீர் வாரிய உயர் அதிகாரியிடம் கேட்டபோது, “தமிழக அரசே பேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் குடிநீரை 10 ரூபாய்க்கு விற்கிறது. ஆனால், குடிநீர் வடிகால் வாரியமானது இன்னமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,000 லிட்டர் தண்ணீரை 3 ரூபாய்க்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனாலும், வேறு சில பிரச்சினைகளாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவது குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். இது மிக அத்தியாவசியமான பிரச்சினை என்பதால், அரசு விரைவில் நல்ல முடிவெடுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x