

கோவை: யோகாவின் மூலம் உலகில் பெரும் தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும் என ஈஷா வளாகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஈஷா நிறுவனர் சத்குரு பேசினார்.
கோவை ஈஷா வளாகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈஷா நிறுவனர் சத்குரு பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘நம் பாரத தேசத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 97 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், 1947-ம் ஆண்டு அது வெறும் 3 சதவீதமாக குறையும் அளவுக்கு நம் கல்விமுறை பறிக்கப்பட்டது.
இவ்வளவு இன்னல்களையும் கடந்த நம் தேசம் படிப்படியாக பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. நம் தேசம் பல விதங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. இன்னும் பல விஷயங்களில் வளர வேண்டியதும் உள்ளது. உலக அளவில் சிறந்து விளங்கும் 500 பெரு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளாக இந்தியர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் அரவணைக்கும் பண்பாலும், திறமைகளாலும் இப்பொறுப்புகளை அவர்கள் அடைந்துள்ளார்கள்.
ஆக்கிரமிக்கும் காலம் முடிவடைந்துவிட்டது. இது அரவணைப்பதற்கான காலம். நம் தேசத்தில் தோன்றிய அறிவியல், கலாச்சாரம், பொருளாதாரம், இசை என எல்லாவற்றின் மூலம் உலகில் நாம் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாள் அல்லது துப்பாக்கியால் உலகில் தாக்கம் ஏற்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. குறிப்பாக, பாரதத்தில் தோன்றிய யோகாவின் மூலம் பெரும் தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். நம் பிரதமரின் முயற்சியால் யோகா உலகளவில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நம் பாரத தேசம் தற்போது பல வழிகளில் முன்னேறி வருகிறது. இதில் தமிழ் மக்கள் ஒரு முக்கிய பங்கை வகிக்க வேண்டும். இவ்வறு அவர் பேசினார்.