

மேட்டூர்: மேட்டூர் அருகே கோனூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் சந்துக்கடையை மூடக்கோரி எம்எல்ஏவிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனூர் கிராம ஊராட்சியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கோனூர் ஊராட்சி துணை தலைவர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். கிராமத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, கிராம சபைக் கூட்டம் முடியும் தருவாயில், மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் கலந்து கொண்டார். கிராம சபைக் கூட்டத்தில், ஒவ்வொரு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், மக்களுக்கு கிடைக்கக்கூடிய பயன்கள் மற்றும் கிராமத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் எம்எல்ஏ சதாசிவத்தை முற்றுகையிட்டு, கோனூரில் 6 இடங்களில் சந்துக்கடை அமைத்து மது விற்பனை நடக்கிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். எனவே, சந்துக்கடையை மூட வேண்டும் என எம்எல்ஏவை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரை அழைத்து, சந்துக்கடை நடத்துபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ சதாசிவம் அறிவுறுத்தினார். சந்துக்கடை நடத்துபவர்களை கைது செய்யவில்லை என்றால் மறியல், போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரித்தார். சந்துக்கடை நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.