

ஓசூர்: விவசாய நிலம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி, ஓசூர் அருகே சென்னசந்திரத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
ஓசூர் அருகே சென்னசந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னசந்திரம், உளியாளம், மாரசந்திரம், கெம்பசந்திரம், திம்மசந்திரம் ஆகிய 5 கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 2,000 ஏக்கருக்கும் மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தில் பல தலைமுறையாகக் குடியிருந்து வருகின்றனர்.
இப்பகுதி குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குப் பட்டா வழங்கி, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இக்கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், நடவடிக்கை இல்லை. இதனிடையே, சுதந்திர தினத்தையெட்டி நேற்று சென்னசந்திரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
நேற்று காலை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க அரசு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர் ஜெயகுமார் ரெட்டி உள்ளிட்டோர் வந்தனர். ஆனால், கிராம மக்கள் யாரும் கூட்டத்தில் பங்கேற்க வரவில்லை. இதையடுத்து, அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது விளை நிலம் மற்றும் வீட்டுமனைக்கு பட்டா வழங்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்றும் வரை கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என கிராம மக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், கிராம சபைக் கூட்டத்தை நடத்த முடியாமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.