Published : 16 Aug 2023 06:25 AM
Last Updated : 16 Aug 2023 06:25 AM

நித்தியானந்தா சீடர்கள் வசம் இருந்த ரூ.30 கோடி அரசு நிலம் மீட்பு

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திரிசூலம், பச்சையம்மன் கோயில் தெருவில் அரசுக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள மலை புறம்போக்கு நிலம் உள்ளது. ரூ.30 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை நித்தியானந்தா குழுமத்தினர் சுமார் 7 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர்.

அதே போன்று அந்த நிலத்தை வேறு சிலரும் ஆக்கிரமித்து அதில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதையறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் உத்தரவின்பேரில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுதொடர்பாக ஏற்கெனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது.

இருந்த போதிலும் அவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை கைவிட மறுத்ததால், நேற்று பல்லாவரம் வட்டாட்சியர்ட்டி. ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர், காவல் துறையினர் முன்னிலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுற்றுச் சுவர் முழுவதும் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினர். பின்னர் தனியார் வசம் இருந்த அரசு நிலத்தை மீட்டனர்.

இதுகுறித்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறும்போது, நித்தியானந்தா குழுவினருக்கு இந்த மலை புறம்போக்கு நிலம் அருகே சுமார் 76 செண்டு பரப்பளவு கொண்ட பட்டா நிலம் உள்ளது. அதன் அருகிலேயே உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அரசு மலை புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து அவர்கள் சுற்றுச் சுவர் அமைத்து அனுபவித்து வந்தனர்.

அதனால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது. இதன் சந்தை மதிப்பு ரூ.30 கோடி இருக்கும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x