

சென்னை: வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை பணிகளை நடப்பு நிதியாண்டில் (2023-24) முடிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே சார்பில், நாட்டின் 77-வது சுதந்திர தின விழா பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், தேசிய கொடியேற்றி, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், பொதுமேலாளர் ஆர்.என்.சிங் பேசியதாவது:
இந்திய ரயில்வேயில் வெவ்வேறு சாதனைகளில் தெற்கு ரயில்வே முக்கிய பங்களிப்பு அளிக்கிறது. 2022-23-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேயின் மொத்த வருவாய் ரூ.11,000 கோடியாக இருந்தது. இது, 2021-22-ம் நிதியாண்டை விட 51 சதவீதம் அதிகமாகும்.
நடப்பாண்டில் முதல் 4 மாதங்களில் நீடித்த வளர்ச்சியைத் தக்கவைத்து, மொத்த வருவாய் ரூ.3,883கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 11 சதவீதம் அதிகம். ரயில்வே சரக்கு போக்குவரத்து பிரிவில், சரக்கு ஏற்றுதல் 22 சதவீதம் உயர்ந்துள்ளது. பயணிகள் வருவாயைப் பொறுத்தவரை 80 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பயணிகளின் வசதிக்காக, தெற்குரயில்வேயில் 3 வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் பல்வேறு தடங்களில் வந்தே பாரத் ரயில்களை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்காலத்தில் மேலும் பல வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவோம்.
2023-24-ம் நிதியாண்டில், காரைக்கால்-பேரளம் மற்றும் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடம், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர் ஆகியபுதிய பாதை பணிகளை முடிப்பதற்கு உறுதியாக உள்ளோம். இதுதவிர, சில பாதைகளில் இரட்டைபாதை மற்றும் அகலப்பாதை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆர்.பி.எஃப். தலைமை பாதுகாப்பு ஆணையர் ஈஸ்வர ராவ், ரயில்வே கட்டுமானப் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.