Published : 07 Nov 2017 08:13 AM
Last Updated : 07 Nov 2017 08:13 AM

மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்: பழுதடைந்த 5,900 மின் பெட்டிகள் மாற்றம் - 2 சிறுமிகள் பலியானது பற்றி புதிய விளக்கம்

சென்னை நகரில் மின்தடை ஏற்பட காரணமாக இருந்த பழுதடைந்த 5,900 மின் பெட்டிகள் (பில்லர் பாக்ஸ்கள்) மாற்றப்பட்டு புதிய மின் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன என மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 மற்றும் 10-வது மண்டலத்தில் மழைநீர் வெளியேற்றும், நிவாரணப் பணிகளை அமைச்சர் தங்கமணி நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 மற்றும் 10-வது மண்டலத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு விட்டது. அங்கு நிவாரணப் பணிகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. எனவே, இந்த இரு மண்டலத்தில் குடிநீர், கழிவு நீர் மற்றும் மின்சாரம் என அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டன.

மேலும், மழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவெடுக்க உள்ளோம். சென்னை நகரில் மொத்தம் 80 ஆயிரம் மின் பெட்டிகள் உள்ளன. இவற்றில் 6,400 மின் பெட்டிகள் மாற்ற வேண்டும் என கணக்கெடுப்பு நடத்தி அதில் தற்போது 5,900 மின் பெட்டிகள் மாற்றப்பட்டு விட்டன. மீதமுள்ள மின் பெட்டிகள் விரைவில் மாற்றப்பட்டுவிடும்.

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி சிறுமிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல் வருகிறது. உண்மையில், பில்லர் பாக்சில் இருந்து குழந்தைகள் மீது மின்சாரம் பாயவில்லை. பூமிக்கடியில் பொருத்தப்பட்டிருந்த மின்சார கேபிள் பழுதடைந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

அதன்பேரில், மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்ய அங்கு சென்றனர். அப்போது, பழுதடைந்த கேபிளை சரி செய்ய ஒரு நாள் ஆகும் என அதிகாரிகள் கூறினர். அதற்கு பொதுமக்கள் கேபிளை மேலே போட்டு விட்டு செல்லுங்கள் என கூறினர். அவ்வாறு மேலே போடப்பட்ட கேபிள்கள் மீது வாகனங்கள் ஏறிச் சென்றதால் அவை பழுதடைந்தன.

இந்நிலையில், மறுநாள் மழை பெய்த போது அந்த மின்சார கேபிள் நீரில் மூழ்கியது. அப்போது கேபிளுக்குள் தண்ணீர் புகுந்தது. அப்போது அதை மிதித்த குழந்தைகள் மீது மின்சாரம் பாய்ந்தது. எனவே, மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் இறந்ததற்கு மின் பெட்டிகள் காரணம் கிடையாது.

சைதாப்பேட்டை பகுதியில் பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற மின்வாரிய அதிகாரி ஒருவர் பணம் கேட்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஓர் அமைப்பு. எனவே, மின்மாற்றிகளை மாற்ற பொதுமக்கள் பணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஆதாரப்பூர்வமாக புகார் தெரிவித்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தங்கமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x