

காரைக்குடி: தமிழகத்தில் சாதி கொடுமை இருப்பது வேதனை அளிக்கிறது என, கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார்.
காரைக்குடியில் உள்ள தனது எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கார்த்தி சிதம்பரம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: அரசு திட்டங்களை செயல் படுத்தும்போது நிபந்தனைகள் விதிப்பதால், ஏமாற்றங்கள், மனவருத்தங்கள் ஏற்படுகின்றன.
அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். சில நிபந்தனைகளால் முதியோர் உதவித் தொகையும் பலருக்கு கிடைக்காமல் உள்ளது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும் விதிமுறைகளின்றி, வசதி படைத்தோர் உட்பட அனைவருக்கும் சென்று சேர வேண்டும். மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வேதனைக் குரியது.
மன அழுத்தத்தை போக்க அவர்களுக்கு கவுன்சலிங் அளிக்க வேண்டும். சாதி என்பது இந்தியாவின் சாபக்கேடு. தமிழகத்தில் சாதி கொடுமை இருப்பது வேதனை அளிக்கிறது. இதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய மனப்பான்மை மாணவர்களிடம் வந்ததை சமுதாயம் கவனிக்காமல் இருந்துவிட்டது என்பதை நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
இதில், அரசியல் கட்சிகளை குறை சொல்ல முடியாது. சமுதாய அமைப்புகள் இந்த உணர்வுகளை போக்க முயற்சி எடுக்க வேண்டும். சாதி வெறி தாக்குதல் நடத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.