கத்தாழை ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் என்எல்சி விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றாததால் மக்கள் எதிர்ப்பு
கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை ஊராட்சியில் என்எல்சிகுறித்த தீர்மானம் நிறைவேற்றாததால் தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட மறுத்து பொதுமக்கள் வெளிநடப்பு சென்றனர்.
புவனகிரி ஒன்றியம் கத்தாழை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் பாலு வரவேற்றார். இக்கூட்டத்தில் கிராம வளர்ச்சி குறித்து பல்வேறு தீர்மானங்கள் தீர்மான புத்தகத்தில் எழுதப்பட்டன.
இந்த நிலையில் கத்தாழை,கரிவெட்டி கிராம இளைஞர்கள், "என்எல்சிக்கு நிலம்கொடுத்துள்ளோம். எங்களுக்கு என்எல்சி நிரந்தர வேலையும், முழு இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றனர். இதற்கு ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், " உங்கள் கோரிக்கை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுங்கள். இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட மாட்டாது" எனத் தெரிவித்தனர்.
இதனால் கிராம மக்கள் தீர்மான புத்தகத்தில் கையெழுத்து போட மறுத்து கலைந்து சென்றனர். இதேபோல் புவனகிரி ஒன்றியம் வீரமுடையா நத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சிமன்ற தலைவர் பாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது பாமக ஒன்றிய செயலாளர் சரண் ராஜ், விசிக ஒன்றிய துணை செயலாளர் ரஜினி வளவன், மக்கள் அதிகாரம் மணியரசன் மற்றும் இளைஞர்கள் ஒன்று திரண்டு, நெய்வேலி என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர். இதனை ஏற்க முடியாது என கிராம ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் முழக்க மிட்டபடி வெளிநடப்பு செய்தனர்.
இதேபோல் கீழ்வளையமாதேவி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சிமன்றத் தலைவர் செம்புலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன . அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கையாக கொடுங்கள் என கிராம ஊராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதேபோல் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் மனு அளித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.
