அக்.10-ல் தலைமை செயலகம் முன்பு உண்ணாவிரதம்: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி.
கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை செயற்குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி.
Updated on
1 min read

கரூர்: கரூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் ரா. சண்முக சுந்தரம் தலைமை வகித்தார்.

மாநில பொதுச் செயலாளர் சு.முத்து விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சி.நேதாஜி வரவேற்றார். கரூர் மாவட்டச் செயலாளர் தென்னிலை ராஜா நன்றி கூறினார். பின்னர், சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி செய்தியாளர்களிடம் கூறியது: நாட்டில் விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

விவசாய விளை பொருட்கள் விலை வீழ்ச்சியால் பயிர்க் கடனைக் கூட கட்ட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். இதனால், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு உற்பத்தி செலவுடன் சேர்த்து 50 சதவீதம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை எண்ணெய்களை ரேஷன் கடைகளில் மானிய விலையில் விற்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் பயன்பெறும் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 5-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 18 மாவட்டங்களில் தொடர் போராட்டம் நடைபெற்றது.

இந்த கோரிக்கைளை வலியுறுத்தி அக்.10-ம் தேதி தலைமை செயலகம் முன்பு 2,000 விவசாயிகள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக தீர்மானித்துள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in